மேலும் செய்திகள்
கந்தசுவாமி கோவிலில் ரூ.77 லட்சம் வருவாய்
21-May-2026
விருத்தாசலம்: சிவன் கோவிலில் உண்டியல்களை உடைத்த மர்மநபர்கள், 40 ஆயிரம் மதிப்பிலான காணிக்கைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தில், அபிராமி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று காலை வழக்கம்போல கோவிலுக்கு விளக்குபோட வந்த பக்தர்கள், கோவில் கேட்டை உடைத்து, அங்கிருந்த 2 உண்டியல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பாபு உள்ளிட்ட போலீசார் சென்று விசாரனை நடத்தினர். அதில், நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. மேலும், கோவில் கேட் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், அங்கிருந்த இரண்டு உண்டியல்களை பெயர்த்து எடுத்துச் சென்று, அருகிலுள்ள மோட்டார் கொட்டகையில் வைத்து, உண்டியல்களில் இருந்த காணிக்கைகளை சாவகாசமாக திருடிச் சென்றது தெரிந்தது. கிராம கோவில் என்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. தற்போது, உண்டியல்களில் 40 முதல் 50 ஆயிரம் வரை ரொக்கம் இருக்கலாம் என பக்தர்கள் தெரிவித்தனர். மர்ம நபர்கள் விட்டுச் சென்ற தடயங்களை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவிலில் இருந்து உண்டியல்களை பெயர்த்து எடுத்துச் சென்று, காணிக்கையை திருடிச் சென்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21-May-2026