உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்டத்தில் இந்த ஆண்டு இயல்பை விட கூடுதல் மழை! ஏரி,குளங்கள் நிரம்பி, நிலத்தடி நீர் மட்டம் உயர்வு

மாவட்டத்தில் இந்த ஆண்டு இயல்பை விட கூடுதல் மழை! ஏரி,குளங்கள் நிரம்பி, நிலத்தடி நீர் மட்டம் உயர்வு

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் ஆண்டு தோறும் பெய்யக்கூடிய இயல்பான மழையளவை விட, இந்த ஆண்டு கூடுதல் மழை பெய்துள்ளதால் நீர்நிலைகள் ஓரளவுக்கு நிரம்பியுள்ளன.தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரை நீடிக்கும். அதில் நவம்பர் மாதத்தில் தான் கனமழை கொட்டும். இந்த ஆண்டு அக்டோபர் 2வது வாரத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழை தொடக்கத்தில் இருந்து வடகிழக்குப்பருவ மழை துவங்கியதாக அறிவிக்கப்பட்டது. கடலுார் மாவட்டத்தில் 10 ஆண்டு சராசரி மழையளவு 1200 மி.மீட்டர் ஆகும். அதில் வடகிழக்கு காற்றின் மூலம் நமக்கு 790 மி,மீ., மழை பெய்ய வேண்டும். அக்டோபரில் 220 மி.மீ., மழைக்கு 213.36 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது. இதில் 7 மி.மீ., குறைவாக பெய்துள்ளது. அதையடுத்து நவம்பர் மாதத்தில் 295.30 மி.மீ., பெய்ய வேண்டிய இயல்பான மழைக்கு, 211.84 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது. நவம்பர் மாதத்திலும் 8.2 மி.மீ., மழை குறைவாகவே பெய்துள்ளது. வழக்கமாக நவம்பர் மாதத்தில் கனமழை கொட்டும். ஆனால் இந்த ஆண்டு அவ்வாறில்லாமல் சாதாரணமாக பருவ மழையாவே பெய்தது. ஆனால் பெஞ்சல் புயல் 30ம் தேதி கரையை நெருங்கியதும் கடலுார் மாவட்டத்தில் பேய் மழை பெய்தது.அதன்படி டிசம்பர் மாதம் 11ம் தேதி வரை 182.30 மி.மீட்டருக்கு 174.08 மி.மீ., மழை பெய்துள்ளது. இந்த பெஞ்சல் புயல்காரணமாக பெருவெள்ளத்தை ஏற்படுத்தி பல மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.தற்போது, பருவமழை காலத்தில் வங்கக்கடலில் 9க்கும் மேற்பட்ட புயல் சின்னம் ஏற்படுகிறது. இதன் காரணமாகத்தான் தமிழகத்திற்கு வடகிழக்குப்பருவ மழை வலுவாக கிடைக்கிறது. காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயல் உருவாக வில்லையென்றால் மழை பொழிவும் வெகுவாக குறைந்துவிடும் நிலை உள்ளது. வடகிழக்கு பருவ காற்றின் மூலம் கடலுார் மாவட்டத்திற்கு அதாவது, 1.10.24 முதல் 11.12.2024 வரை உள்ள மாதங்களில் இயல்பான மழையளவு 697.80 மி.மீ., மழை பொழிவு இருக்க வேண்டும். அதில் தற்போது 598.98 மி.மீ., மட்டுமே மழை பெய்துள்ளது. மழைக் காலங்களில் பெய்ய வேண்டிய மழையளவில் 98.82 மி.மீ., குறைவாக பதிவாகியுள்ளது. ஆனால் ஆண்டு மழையளவான 1206.7 மி.மீட்டரில் 1221.48 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை 14.78 மி.மீ., கூடுதல் மழைபெய்துள்ளது. இதனால் கடலுார் மாவட்டத்திலுள்ள நீர் நிலைகள் பெரும்பாலும் நிரம்பியுள்ளன. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இன்னும் 11 நாட்களில் கூடுதல் மழை பெய்ய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைக்காரணமாக மழை பொழிவு இருக்கும் என மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை