கடலுார் கடற்கரை கிராமங்களில் தண்ணீர் உட்புகும் அபாயம்! அதிகரிக்கும் கரை அரிப்பால் மக்கள் அச்சம்
கடலுார்: கடலுார் கடற்கரை கிராமங்களில், நாளுக்கு நாள் அதிகரிக்கும் கடற்கரை அரிப்பு காரணமாக, சில்வர் பீச் மற்றும் கடற்கரையொட்டிய கிராமங்களில் தண்ணீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை துவங்கியதும், வங்கக்கடலில் புயல் சின்னம், காற்றழுத்த தாழ்வு நிலை, போன்றவை அடிக்கடி உருவாகி வருகிறது. இதனால், அடிக்கடி மழை பெய்கிறது.ஒவ்வொரு பருவமழை காலத்திலும் குறைந்தபட்சம் 8 முதல் 9 புயல் சின்னம் உருவாகி மழையை கொடுக்கிறது. இது பருவமழை குறைந்த பின்னர் படிப்படியாக சாதாரண நிலையை எட்டிவிடும். ஆனால், கடந்த 2014ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பின்னர் அதிக மழை, அதிக வெயில், அதிக பணி என, எதை எடுத்தாலும் உச்சபட்ச அளவாக உள்ளது.இனிவரும் காலங்களிலும் கடலின் அடிபாகம் அதிகளவு வெப்பத்துடன் இருப்பதால் இயற்கை சீற்றம் அதிகபட்சமாக தான் இருக்கும் என, கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், கடலுார் சில்வர் பீச் கடல் சீற்றத்தின் காரணமாக நிலப்பரப்பில் உள்வாங்கியுள்ளது. அதேபோல் சில்வர் பீச்சையொட்டியுள்ள தேவனாம்பட்டினம் கிராமம் மற்றும் அதையொட்டிய தாழங்குடா, சுபா உப்பலவாடி உள்ளிட்ட பல்வேறு கடற்கரை கிராம பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டு மிக அருகாமையில் கடல் நெருங்கியுள்ளது. தேவனாம்பட்டினம் கிராமத்திலுள்ள மண் மேடு முழுவதும் படிப்படியாக கடலுக்கு இறையாகி வருகிறது. அதாவது கடல் மட்டத்தில் இருந்து 8 அடி உயர மண் மேடு முழுவதும் இடிந்து கடல் அலை இழுத்து சென்று வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது இக்கிராமம் பள்ளமாக இருந்ததால் அதிகளவில் உயர்சேதம் ஏற்பட்டது.அத்துடன், அங்குள்ள மின்கம்பத்தின் முக்கால்வாசி உயரம் வரை அலை தாக்கியது. கடல் அரிப்பை தடுக்கும் நோக்கில் கடற்கரையோரம் கருங்கற்கள் குவியலாக கொட்டியுள்ளனர். ஆனால் அதையும் மீறி கருங்கற்கல் குவியல்களை கடலலை இழுத்துசென்று வருகிறது. இதேப்போல கடந்த காலங்களில் கடல் அரிப்பு காரணமாக, பூம்புகார், தனுஷ்கோடி போன்ற நகரங்கள் கடலுக்கு இறையாகிவிட்டன. மீண்டும் இதுபோன்ற கடல் அரிப்பு ஏற்படாதவாறு அதிகளவில் கற்களை கொட்டி பாதுகாக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடற்கரை கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.