கள்ளநோட்டு வழக்கில் கைதான இரு குண்டாஸ்
கடலுார்:ராமநத்தம் அருகே கள்ளநோட்டு வழக்கில் கைதான வி.சி.,பிரமுகர் உட்பட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் செல்வம்,35. வி.சி., கட்சி முன்னாள் மாவட்ட பொருளாளர். இவர். தனது பண்ணை வீட்டில் கள்ள நோட்டு அச்சடிப்பதை, ராமநத்தம் போலீசார் கடந்த மார்ச் 31ம் தேதி கண்டுபிடித்தனர்.ராமநத்தம் போலீசார் இது தொடர்பாக எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, கர்நாடகா மாநிலத்தில் பதுங்கியிருந்த செல்வம்,35, கல்லுார் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் பிரபாகரன்,32, மற்றும் வல்லரசு,25, பெரியசாமி,29, ஆறுமுகம்,30, சூர்யா,25, ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட செல்வம், பிரபு ஆகிய இருவரின் குற்றச்செயலை தடுக்கும் பொருட்டு எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். கடலுார் மத்திய சிறையில் உள்ள செல்வம், பிரபு ஆகியோரிடம், அதற்கான உத்தரவு நகலை வழங்கி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.