கோடை மழையில் நெற்பயிர்கள் சேதம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
விருத்தாசலம்: விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். இதில், அனைத்து துறை அதிகாரிகள், வேப்பூர், திட்டக்குடி, விருத்தாசலம், மங்கலம்பேட்டை, கம்மாபுரம், பெண்ணாடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். மணிமுக்தாறு பாதுகாப்பு மற்றும் பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் தனவேல் பேசுகையில், பரவளூர் வி.ஏ.ஓ., சரியாக கிராமத்திற்கு வருவதில்லை. அலுவலகம் பூட்டியே கிடப்பதால், கிராம மக்கள் கடும் அவதியடைகின்றனர். உரிய நடவடிக்கை இல்லை என்றால், வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடத்தப்படும்.அதேப் போன்று விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும். வடிகால் வாய்க்கால்களை முறையாக துார்வாராததால், தொரவளூர், பரவளூர், கொடுக்கூர் உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெற் பயிர்கள் கோடை மழையில் மூழ்கி பாழாகி வருகிறது. எனவே, நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்' என்றார்.இதே கோரிக்கையை விவசாயிகள் வலியுறுத்தி பேசினர். இதற்கு பதிலளித்த நேர்முக உதவியாளர் அந்தோணிராஜ், விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.