மேலும் செய்திகள்
மலையேற்றத்துக்கு சிறந்தது மகாலிதுர்கா மலை
15-May-2025
கேப்பர் மலை என்பது உண்மையில் ஒரு மலையே இல்லை. கடலுார் மாநகரம் முழுவதும் சமவெளிப்பகுதியில் அமைந்துள்ளதால், அருகில் உள்ள செம்மண் மேட்டுப்பகுதி மலையாக அழைக்கப்படுகிறது. இது செம்மண் கலந்த செங்கல் மலையாகும். கேப்பர் மலையில் கற்களே கிடையாது. மேலே சிவந்த நிறத்தில் செம்மண் குன்றுகள், அதன் கீழே மணற்பாறைகள் காணப்படுகின்றன. கடலுார் துறைமுகத்திற்கு மேற்கேயும், திருவந்திபுரத்திற்கு தெற்கேயும் அமைந்துள்ளது. திருவந்திபுரம் மலைக்குன்றுகளும் இதன் தொடர்ச்சியாகும். கடலுார் துறைமுகம் அடுத்த கேப்பர் குவாரி அருகே அகழ்ந்தெடுக்கப்பட்டு சாலைகள் போட பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கி.பி.,1796ம் ஆண்டு வண்டிப்பாளையத்திற்கு அருகே, இந்த மலையின் மீது ஆங்கிலேய படைத்தளபதி பிரான்சிஸ் கேப்பர் என்பவர் மாளிகை ஒன்றை கட்டி வாழ்ந்து வந்தார். அதன் பின் அவரது பெயரால் இந்த மலை கேப்பர் மலை என்று அழைக்க துவங்கினர். கி.பி.,1815ம் ஆண்டு இந்த மாளிகை அரசுக்கு சொந்தமானது. மாளிகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, சிறைச்சாலையாக மாற்றப்பட்டன. இந்த வளாகம் 300 மீட்டர் நீளம், 200 மீட்டர் அகலம் உடையது. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற பலர் இங்கு சிறைப்படுத்தப்பட்டனர். பாரதியார் இங்கு சிறைப்படுத்தப்பட்டதன் நினைவாக அவரது சிலை, சிறை வளாகத்தில் உள்ளது. இயற்கை வளம் நிறைந்த கேப்பர் மலையில் கொண்டங்கி ஏரி உள்ளது. இது 3,000 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி தரக்கூடியது. மலையின் அடிவாரத்தில் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. அருகிலேயே லட்சுமி ஹயக்ரீவர் கோவில், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில், விலங்கல்பட்டு முருகன் கோவில் அமைந்துள்ளதால் ஏராளமான பக்தர்கள் இப்பகுதிக்கு வருகை புரிகின்றனர். மலையில் உள்ள மணற்பாறைகளின் அடியில் தரமான களிமண் கிடைக்கிறது. பண்ருட்டி மற்றும் வண்டிப்பாளைம் பகுதியில் இந்த களிமண் கொண்டு நேர்த்தியான பொம்மைகள், மண்கலசங்கள் செய்யப்படுகின்றன. இங்குள்ள செம்மண் பூமியில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால், பலா, முந்திரி போன்றவை செழிப்பாக விளைகின்றன. ஏரி, விவசாயம், கோவில்கள், கெடிலம் ஆறு என இயற்கையின் கொடையாக உள்ள கேப்பர் மலையை சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கு ஏற்ற வசதிகளை செய்து சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இயற்கையான நீருற்றுகள், மூலிகை காற்று, மண் வளம் காரணமாகவே ஆங்கிலேயர்கள் கேப்பர் மலை பகுதியில் காச நோய் மருத்துவமனை, தொழுநோய் மருத்துவமனை, சிறைச்சாலையை அமைத்தனர். மன ரீதியாக மனிதனை மாற்றக்கூடிய ஆற்றல் நிறைந்த பகுதி என்றார்.
15-May-2025