மனைப்பட்டா கேட்டு பெண்கள் மனு
பண்ருட்டி; பண்ருட்டி களத்துமேடு ஏரி பகுதியை சேர்ந்தவர்கள் வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.பண்ருட்டி களத்துமேடு ஏரி புறம்போக்கில் ஆக்கிரமித்திருந்த 120 குடிசை வீடுகள் கடந்த 2023ம் ஆண்டு அகற்றப்பட்டது. அப்போது, வெளியேறியவர்கள் ஏரி பகுதியில் 48 குடிசை வீடுகள் அமைத்து அதே பகுதியில் வசித்து வருகின்றனர். அங்குள்ள தெருவிளக்குகளில் அனுமதியின்றி மின்சாரம் எடுத்து பயன்படுத்தி வந்தனர். நேற்று முன்தினம் மின்துறை சார்பில் மின் இணைப்புகள் துண்டித்தனர்.இதனையடுத்து அப்பகுதி குடிசை வீடுகளில் வசித்து வந்த 48 குடும்பத்தினர். தங்கள் உயிருக்கு ஆபத்துள்ளது என நேற்று முன்தினம் பாம்புடன் பண்ருட்டி நகராட்சி முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி கமிஷ்னர் கண்ணன் பேச்சுவார்த்தைக்கு பின் இரவு 7:30 மணிக்கு கலைந்து சென்றனர்.அதையடுத்து, நேற்று பகல் 12:00 மணிக்கு பண்ருட்டி நகராட்சி சேர்மன் ராஜேந்திரனை சந்தித்து எங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். வீட்டுமனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தின்பேரில் கலைந்து சென்றனர்.