லேசான மழைக்கே சாலையில் தேங்கிய மழைநீர்
லேசான மழைக்கே சாலையில் தேங்கிய மழைநீர்தர்மபுரி:தர்மபுரியில் பெய்த மிதமான மழைக்கு, மழைநீர் வெளியேற வழியில்லாமல், கழிவுநீருடன் கலந்து சாலையில் தேங்கியது.தர்மபுரியில், நேற்று முன்தினம் இரவு பரவலாக மிதமான மழை பெய்தது. இதில், சாலையோர கழிவுநீர் கால்வாய்களில் மழைநீரும் கலந்து சென்றது. இந்நிலையில், தர்மபுரி அடுத்துள்ள அரசு கலைக்கல்லூரி மாணவியர் விடுதி முன், மழைநீர் வெளியேற வழியில்லாமல், சேலம் - தர்மபுரி நெடுஞ்சாலையில், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். தொடர்ந்து, நேற்று காலை நேரத்தில் மழைநீர் வடிந்த பின், சாலையில் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை ஓட்டி சென்றனர். அதே இடத்தில், சில மாதங்கள் முன், மழைநீர் தேங்கி நின்றதால், அதை கடந்து சாலையில் சென்ற மாணவியர் விடுதி பெண் வார்டன் மீது, ஆட்டோ மோதியதில் அவர் பலியானார். எனவே, அதுபோல சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, விடுதி முன் பள்ளமாக உள்ள, சாலையை சீரமைக்க, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.