ஏழு ஆண்டுகளாக திறக்கப்படாத அம்மா பூங்கா
ஏழு ஆண்டுகளாக திறக்கப்படாத அம்மா பூங்கா பாப்பிரெட்டிப்பட்டி, செப். 15---தர்மபுரி மாவட்டம், கடத்துார் ஒன்றியத்தில் ஜாலியூர், ரேகடஹள்ளி, காந்திநகர், அண்ணா நகர், முல்லை நகர் என ஐந்து கிராமங்கள் உள்ளன. 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்காக, ஊரக வளர்ச்சித்துறை மூலம், 2017--18ல், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் ஜாலியூர் கிராமத்தில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. கிராமத்தின் ஒதுக்குப்புறமாக உள்ள இந்த பூங்கா, பெரும்பாலான மக்களுக்கு அமைக்கப்பட்டதே தெரியவில்லை. பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. நடைபயிற்சி மேற்கொள்ள தளம், அமரும் வகையில் இருக்கைகள், சிறுவர்கள் விளையாட விளையாட்டு உபகரணங்கள், கழிவறைகள் அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பயன்பாடு இன்றி திறக்கப்படாததால், செடி கொடிகள் வளர்ந்து முட்புதர்களின் பிடியில் உள்ளது. சிறுவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் துருபிடித்து வீணாகும் நிலையில் உள்ளது.இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில்,' 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டதற்கு பதில், கால்நடை மருத்துவமனையோ, துணை சுகாதார நிலையமோ அமைக்கப்பட்டு இருந்தால் மக்கள் பயனடைந்திருப்பர். பூங்கா அமைக்கப்பட்டது பெரும்பாலான மக்களுக்கு தெரியாது. மக்களுக்கு பயன்பாடு இன்றி அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.