நேர்மை அதிகாரி ஒருவரும் இல்லையா: பெண் குமுறல்
அரூர்:கடைகளை மறைத்து பேனர்கள் வைக்கப்படுவது தொடர்பாக, 'அரூரில் ஒரு நேர்மையான அதிகாரியும் இல்லையா?' என, பெண் வணிகர் ஒருவர் பேசிய வீடியோ பரவி வருகிறது.தர்மபுரி மாவட்டம் அரூரில், பஸ் ஸ்டாண்ட், வர்ணதீர்த்தம், கச்சேரிமேடு, நான்குரோடு உள்ளிட்ட இடங்களில் சாலையோரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், அனுமதியின்றியும் அரசியல் கட்சியினர் விளம்பர பேனர்கள் வைப்பது தொடர்கதையாக உள்ளது.முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த 26ல் தி.மு.க.,வினர் வைத்த பேனர்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. நேற்று முன்தினம் இரவு பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கடை முன், அ.தி.மு.க., சார்பில், பேனர் வைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். அங்கு வந்த கடை உரிமையாளரான சுமித்ரா, இதுகுறித்து வீடியோ எடுத்தார்.வீடியோவில் அவர், 'கடைக்கு வெளியில்இப்படி சாலை நடுவில் பேனர் வைத்தால் நாங்கள் எப்படி வியாபாரம் செய்வது; இதைத் தடுக்க அரூரில் ஒரு நேர்மையான அதிகாரியும் இல்லையா? இரவு 9:45 மணிக்கு ஒரு அரசியல் கட்சி பேனர் வைக்கும், அடுத்து, 12 மணிக்கு இன்னொரு அரசியல் கட்சி பேனர் வைக்கும். கலெக்டர், நெடுஞ்சாலைத் துறையினர், டவுன் பஞ்., நிர்வாகம், இன்ஸ்பெக்டர் யாரும் சரியில்லை' என, குமுறலுடன் பேசினார். அவர் பேச்சு இணையத்தில் பரவி வருகிறது.