பாலக்கோடு அருகே சொத்து தகராறில் பெண்ணை கொன்ற 3 பேர் கைது
பாலக்கோடு: பாலக்கோடு அருகே, சொத்து தகராறில் தந்தையை, இரும்பு ராடால் மகன் தாக்க முயன்றபோது, தடுத்த சித்தியையும் தாக்கியதில் அவர் இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக, 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த எண்டப்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி, 65; பாலக்கோடு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது முதல் மனைவி மாரியம்மாளுக்கு ஜெயராஜ், 38, என்ற மகன் உள்ளார். பல ஆண்டுக்கு முன் மாரியம்மாள் ரங்கசாமியை விட்டு பிரிந்தார். இதனால் ஜோதி, 45, என்பவரை, 2வது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு, 2 மகன்கள். ரங்கசாமி தன் சொத்தில் ஒரு பகுதியை மாரியம்மாளுக்கு கொடுத்துள்ளார். இதை ஏற்காமல் ரங்கசாமியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் மகன் ஜெயராஜ், அவரின் உறவினரான தமிழ்செல்வன், 23, ஆகியோருடன் ரங்கசாமி வீட்டுக்கு மாரியம்மாள் நேற்று காலை சென்றார். அவர் வசித்து வரும் வீட்டை எழுதி தரச்சொல்லி கேட்டுள்ளனர். ரங்கசாமி மறுக்கவே, ஆத்திரமடைந்த ஜெயராஜ் மற்றும் சந்தோஷ் இரும்பு ராடால் ரங்கசாமியை தாக்கியுள்ளனர். தடுக்க வந்த ஜோதியையும் ராடால் தாக்கியதில், சம்பவ இடத்தில் அவர் பலியானார். இதையடுத்து மூன்று பேரும் தப்பி விட்டனர். பாலக்கோடு போலீசார் மூன்று பேரையும் தேடி வந்தனர்.இந்நிலையில், ரங்கசாமியின் முதல் மனைவி மாரியம்மாள், மகன் ஜெயராஜ் அவருடைய உறவினர் தமிழ்செல்வன் உட்பட, 3 பேரை போலீசார் நேற்று கைது செய்து, தர்மபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.