தர்மபுரி நகராட்சி, பேரூராட்சி பணியாளர் சங்க மாவட்ட மாநாடு
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட, யு.டி.யூ.சி., நகராட்சி, பேரூராட்சி பணியாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு, தர்மபுரியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க மாநில தலைவர் அறவாழி, மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். இதில், நகராட்சி, பேரூராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், மகளிர் குழு மூலம், பணி செய்யும் பணியாளர்களுக்கு அரசாணை, 62ன் படி, குறைந்தபட்ச ஊதியம், 18,000 வழங்க வேண்டும். சேமநல நிதி வருடம் ஒருமுறை கணக்கிட்டு, கணக்கீட்டு ரசீது வழங்க வேண்டும். கூட்டுறவு கடனை பிடித்தம் செய்தயுடன், உடனடியாக சங்கத்தில் பணத்தை செலுத்தி ரசீது தரவேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 15 ஆண்டுகளாக பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். துடைப்பம், கையுறை, சோப்பு உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும். மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு ஊதியத்தை விரைவாக வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.