கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்று திட்டத்தை செயல்படுத்த இ.பி.எஸ்.,ஆட்சிக்கு வர வேண்டும்
மொரப்பூர், ''கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்று திட்டத்தை செயல்படுத்த, இ.பி.எஸ்., ஆட்சிக்கு வர வேண்டும்,'' என, மாஜி அமைச்சர் முல்லைவேந்தன் பேசினார்.தர்மபுரி மாவட்ட, ஜெ., பேரவை சார்பில் மொரப்பூர் பஸ் ஸ்டாண்டில், அ.தி.மு.க., திண்ணை பிரசார கூட்டம் நடந்தது. மாவட்ட ஜெ., பேரவை செயலர் வெற்றிவேல் தலைமை வகித்தார். இதில், அமைப்பு செயலரும், முன்னாள் அமைச்சருமான முல்லைவேந்தன் பேசியதாவது:கடந்த சட்டசபை தேர்தலின் போது, 545 வாக்குறுதிகளை ஸ்டாலின் அளித்தார். அதில் நீட் தேர்வு ரத்து, மகளிருக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் உரிமைத்தொகை, மாதந்தோறும் மின்கணக்கீடு, நகைக்கடன் தள்ளுபடி, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.நம்மோடு, நம்மோடுவாக இருக்கும் இ.பி.எஸ்., வேண்டுமா, மக்களோடு இருக்கிறேன் என்று ஏமாற்றுபவர் வேண்டுமா என்று முடிவு எடுக்கும் காலம் இது. என்னுடைய நிலத்தை அளவீடு செய்யக்கோரி, ஆன்லைனில் பணம் செலுத்தினேன். மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும், மூன்று கலெக்டர்கள் மாறிவிட்ட போதிலும் நிலத்தை அளக்கவில்லை. 2019 இடைத்தேர்தலின்போது இ.பி.எஸ்., 300 கோடி ரூபாய் மதிப்பில், கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்று திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதன்பின், ஆட்சிக்கு வந்த, தி.மு.க., அரசு இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது. இது இ.பி.எஸ்., அறிவித்த திட்டம் என்பதால், இதனை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலினிடம் கூறினால், தன்னுடைய அமைச்சர் பதவி போய்விடும் என வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பயப்படுகிறார்.கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்று திட்டத்தின் மூலம், 66 ஏரிகளை நிரப்பி விவசாயம் பெருக வேண்டும் என்றால், இ.பி.எஸ்., ஆட்சிக்கு வர வேண்டும். அவர் வந்தால் மட்டுமே, இந்த திட்டம் நிறைவேற்றப்படும். கரிகாலனுக்கு பின் ஏரிகளை துார்வாரியது, இ.பி.எஸ்., மட்டுமே.இவ்வாறு பேசினார்.கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் சம்பத்குமார், (அரூர்) கோவிந்தசாமி, (பாப்பிரெட்டிப்பட்டி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.