உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பணியால் மக்கள் அவதி

அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பணியால் மக்கள் அவதி

அரூர், அரூர் மோட்டார் வாகன அலுவலகத்தில், வாரத்தில், 2 நாட்கள் மட்டுமே, மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு வருவதால், ஓட்டுனர் உரிமம் பெறுவோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், அரூரில் கடந்த, 1998ல் மோட்டார் வாகன பகுதி அலுவலகம் துவங்கப்பட்டது. ஒரு மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட, 5 பேர் பணிபுரிகின்றனர். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய, 2 தாலுகாவை சேர்ந்த வாகன ஓட்டிகள், அரூர் மோட்டார் வாகன பகுதி அலுவலகத்தில், பழகுனர் உரிமம் சான்று பெற்று, அதன்பின், இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெறுகின்றனர். மேலும், புதிய வாகனங்களையும் பதிவு செய்கின்றனர். இந்நிலையில் அரூர் மோட்டார் வாகன பகுதி அலுவலகத்தில் வாரத்தில், 2 நாட்கள் மட்டுமே மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு வருவதால், அவதிக்குள்ளாகி வருவதாக வாகன ஓட்டிகள் புகார் கூறுகின்றனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: அரூர், மோட்டார் வாகன பகுதி அலுவலகத்திற்கு, 2 மற்றும் 4 சக்கர வாகனம் ஓட்டுனர் உரிமம் பெறுதல், பேட்ஜ், பெர்மிட், டூப்ளிகேட் ஓட்டுனர் உரிமம் மற்றும் காலாவதியான ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், புதிய வாகனங்கள் பதிவு செய்தல், வாகன உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தினமும், 100க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். கடந்த மே மாதம், அரூர் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வந்த குலோத்துங்கன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, தர்மபுரியில் பணிபுரிந்து வந்த தரணீதர் என்பவர் நியமனம் செய்யப்பட்டார். அவர், வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை ஆகிய, 2 நாட்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வருகிறார். மற்ற நாட்களில் அவர், தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணி மேற்கொள்கிறார். இதனால், திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய, 3 நாட்களில் அரூர் மோட்டார் வாகன பகுதி அலுவலகத்திற்கு வரும் வாகன ஓட்டிகள், ஓட்டுனர் உரிமம் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, கல்லுாரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் விடுப்பு எடுத்து அலுவலகத்திற்கு வந்தும், ஓட்டுனர் உரிமம் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அதேபோல், வாகனங்கள் பதிவு செய்தல், வாகன உரிமம் புதுப்பித்தல் போன்ற பணிகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே, அரூர் மோட்டார் வாகன பகுதி அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் மோட்டார் வாகன ஆய்வாளர் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை