ஒப்பந்தப்படி கூலி வழங்க கோழி வளர்ப்போர் கெடு
மொரப்பூர்: தர்மபுரி மாவட்ட கறிக்கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம், மொரப்பூரில் நேற்று நடந்தது. கூட்டத்தில், ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி, கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கு, கோழிக்குஞ்சு வழங்கும் நிறுவனங்கள், உரிய காலத்திற்குள் வளர்ப்புக் கூலி வழங்க வேண்டும். இல்லையெனில், வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சுரேஷ் கூறியதாவது:அரூர், மொரப்பூர் உட்பட மாவட்டத்தில், 600 கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இவர்கள், 15 தனியார் நிறுவனங்களிலிருந்து கோழிக்குஞ்சுகளை பெற்று, 45 நாட்கள் வளர்த்து, அதன் பின், அதன் எடையைப் பொறுத்து, கிலோவுக்கு, 6.50 ரூபாய் வளர்ப்புக் கூலி என, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால், வளர்ப்புக் கூலியை உரிய காலத்திற்குள் வழங்குவதில்லை. ஆண்டுதோறும் வளர்ப்புக் கூலி உயர்வு, கோடைக்கால பராமரிப்புத் தொகை மற்றும் கறிக்கோழி விலை அதிகரித்து விற்பனை செய்யும்போது குறிப்பிட்ட சதவீத தொகை வழங்கப்படும் என அறிவித்த போதிலும், இதுவரை வழங்கவில்லை. இக்கோரிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றாவிட்டால், வேலைநிறுத்தம் செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.