பட்டா இடத்தை அளந்து காண்பிக்க கேட்டு தர்ணா
பாப்பிரெட்டிப்பட்டி, பொ.மல்லாபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய பட்டாவுக்கு இடம் கேட்டு 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் வினோபாஜி தெரு, மாதா கோவில் தெரு, உள்ளிட்ட பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களில் ஆதிதிராவிடர் மற்றும் ஆதிதிராவிட கிறிஸ்துவ மக்களுக்கு கடந்த, 1985, மற்றும், 2010ல், 200 பேருக்கு, அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில், பலர் வீடு கட்டி வசிக்கின்றனர். 35 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவுக்கான இடம் அளந்து காட்டப்படாததால், அந்த இடத்தை கேட்டு, கடந்த, 15 ஆண்டுகளாக அம்மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், பொ.மல்லாபுரத்தில் நேற்று நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், பட்டாவுக்கான இடம் கேட்டு, மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் சின்னா, ஆதி திராவிடர் தனி தாசில்தார் ஜெயசெல்வன், தனி தாசில்தார் செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாற்றிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்-.