உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தனியார் மருத்துவமனையில் பிரசவத்தில் தாய், சிசு பலி உறவினர்கள் தர்ணா போராட்டம்; ஆர்.டி.ஓ., விசாரணை

தனியார் மருத்துவமனையில் பிரசவத்தில் தாய், சிசு பலி உறவினர்கள் தர்ணா போராட்டம்; ஆர்.டி.ஓ., விசாரணை

தர்மபுரி: தர்மபுரி, தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சையின் போது, தாய் மற்றும் சிசு இருவரும் உயிரிழந்ததால், உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த பழைய புது ரெடியூரை சேர்ந்த விவசாயி கோகுலகிருஷ்ணன், 27. இவர் மனைவி சந்தியா, 23. தம்பதிக்கு, 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமான சந்தியா, பிரசவத்திற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு தர்மபுரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சையின்போது, சிசு இறந்து பிறந்ததாக, செவிலியர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, உறவினர்களிடம் அனுமதி பெறாமல், சந்தியாவை ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சந்தியா ஏற்கனவே, இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து, சந்தியாவின் உறவினர் நீலமேகம் கூறுகையில், ''சந்தியாவை மருத்துவமனையில் சேர்த்தபோது, மருத்துவர்கள் இல்லை, செவிலியர்கள் மட்டும் இருந்தனர். அவர்கள், சுக பிரசவம் ஆகும் வரை காத்திருங்கள் என கூறினர். பின் அதிகாலை, 4:00 மணிக்கு அறுவை சிகிச்சை செய்ததாக கூறினர். இதில், அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு, சந்தியா மயக்கம் அடைந்ததாகவும், சிசு இறந்து பிறந்ததாகவும் தெரிவித்த செவிலியர்கள், சிறிது நேரத்தில், அவருக்கு பல்ஸ் குறைவாக உள்ளது என தெரிவித்தனர். எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல், ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சந்தியாவை கொண்டு சென்றனர்,'' என்றார்.மருத்துவர்களின்றி செவிலியர்களே அறுவை சிகிச்சை செய்ததால் சந்தியா இறந்துள்ளார் எனக்கூறி, அவரது உறவினர்கள், சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனை முன், நேற்று காலை, 8:00 மணி முதல், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் வேலுதேவன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்ரி, டி.எஸ்.பி., சிவராமன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதில், சிகிச்சையின்போது, தவறுகள் ஏற்பட்டிருந்தால், சம்மந்தபட்டவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி., சிவராமன் உறுதி அளித்ததால், மதியம், 2:00 மணிக்கு, உறவினர்கள் கலைந்து சென்றனர்.இது குறித்து ஆர்.டி.ஓ., காயத்ரி கூறுகையில், ''தனியார் மருத்துவமனையில், இளம்பெண் மற்றும் சிசு இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டேன். இறந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இளம்பெண்ணுக்கு செவிலியர்கள் அறுவை சிகிச்சை செய்ததாக வரும் புகார் குறித்து, மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ