திண்டுக்கல்லில் கோயிலை அபகரிக்க முயற்சி அறநிலைத்துறைக்கு எதிர்ப்பு, வாக்குவாதம்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகளை துவங்க வந்த அறநிலை துறை அதிகாரிகளிடம் கோயிலை அபகரிக்க முயற்சி செய்வதாக கூறிய பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் அருகே பில்லம்ம நாயக்கன்பட்டியில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த கதிர் நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. சிதலமடைந்த இக்கோயிலை 2007ல் அப்பகுதியை சேர்ந்த 300 குடும்பத்தினர் நிதி திரட்டி வரி வசூல் செய்து புதிதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர். இதனிடையே இக்கோயிலை ஹிந்து அறநிலையத்துறை கையகப்படுத்தியது. இந்நிலையில் பூஜை செய்து வரும் 3 பேர் தாங்கள் கட்டிய கோயில் என கூறி வந்தனர்.இது தொடர்பாக கிராம மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நேற்று அங்கு வந்த ஹிந்து அறநிலைத்துறை அதிகாரிகள் கும்பாபிஷேக பணிகளை தொடங்குவதற்காக பாலாலயம் செய்ய முயன்றனர். இதையறிந்த ஊர் மக்கள் நுாற்றுக்கு மேற்பட்டோர், கும்பாபிஷேகத்தை ஊர் சார்பில் நடத்தி கொள் கிறோம். எங்களுக்கு சொந்தமான பூர்வீக கோயிலை ஹிந்து சமய அறநிலைத்துறை அபகரிக்க முயல்கிறது என்றதோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். வடமதுரை போலீசார் சமாதனம் செய்தனர்.