உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரசு பள்ளி ஆண்டு விழாவுக்கான நிதி வராததால்... பரிதவிப்பு! கை பணத்தை செலவு செய்த தலைமை ஆசிரியர்கள்

அரசு பள்ளி ஆண்டு விழாவுக்கான நிதி வராததால்... பரிதவிப்பு! கை பணத்தை செலவு செய்த தலைமை ஆசிரியர்கள்

வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்ட அரசு பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் நடத்தி முடித்த நிலையில் அதற்காக அறிவித்த நிதி இதுவரை வழங்காததால் கை பணத்தை செலவு செய்து விழாவை நடத்திய தலைமை ஆசிரியர்கள் பரிதவித்து வருகின்றனர். மாணவர்களின் கல்வித்திறன் மட்டுமின்றி அவர்களது கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களை மேம்படுத்தும் வகையில் பள்ளி ஆண்டு விழாவை பெற்றோர், ஆசிரியர்கள் முன்னிலையில் சிறப்பாக நடத்த தமிழக அரசு வலியுறுத்தியது. மேலும் தமிழர் பண்பாடு, மொழி சிறப்பு, இலக்கியங்கள் காட்டும் அறநெறி, நாடகம், நடனம், பட்டிமன்றம், இசை என பல்வேறு திறமைகளை வெளி கொண்டு வரவும், விளையாட்டு, நாட்டு நலப்பணி திட்டம், செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை போன்றவற்றில் சிறப்பாக பங்காற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கவும் அறிவுறுத்தியது. 100 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகளுக்கு ரூ.2500 101-- 250 பேர் உள்ள பள்ளிகளுக்கு ரூ.4000 , 251-- 500 பேர் உள்ள பள்ளிகளுக்கு ரூ.8000 , 1001-- 2000 பேர் உள்ள பள்ளிகளுக்கு ரூ.30,000 , 2000க்கு மேல் மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. பள்ளி தலைமை ஆசிரியர்களோ தங்களது கை பணத்தை செலவு செய்து ஆண்டு விழாவை நல்ல முறையில் நடத்தி முடித்தனர். 2025- 2026 கல்வியாண்டு முடிந்த நிலையில் அரசு அறிவித்த நிதி இதுவரை எந்த பள்ளிக்கும் வழங்கவில்லை. இதனால் கை பணத்தை செலவு செய்த தலைமை ஆசிரியர்கள் பரிதவித்து வருகின்றனர். இந்த கல்வி ஆண்டோடு ஓய்வு , இடமாறுதல் பெறுபவர்கள் என தலைமை ஆசிரியர்கள் பலர் இருக்கும் நிலையில் நிதி எப்போது கிடைக்கும் என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். ஆண்டு விழாக்களை சிறப்பு நடத்த வேண்டும் என கூறும் அரசு அதற்கான நிதியை அந்தந்த கல்வியாண்டிலே விரைந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ............. ஜனவரியிலே நிதி ஒதுக்கலாமே அரசு பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் சிறப்பாக நடக்கிறது. ஆனால் மார்சில் தேர்வு நேரத்தில் விழாவை நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. தேர்தலுக்காக ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற நிலையில் விளையாட்டு போட்டிகளில் ரகம் வாரியாக மாணவர்களை பிரித்தல், கலை நிகழ்ச்சிகளுக்கு பயிற்சி அளித்தல், விழாவை சிறப்பாக நடத்துவது என்பதில் சிரமம் இருந்தது. பள்ளிக்கல்வித்துறையோ டிசம்பரிலே இதற்கான அறிவிப்பை வெளியிட்டு ஜனவரியில் விழாவை நடத்தி முடிக்க வேண்டும் . இதற்கான நிதியையும் கூடுதலாக்கி ஜனவரியிலேயே வழங்க வேண்டும். அப்போது தான் தலைமை ஆசிரியர்கள் கூடுதல் ஆர்வத்துடன் ஆண்டு விழவை நடத்தி முடிப்பர். - வீ.கோபிநாதன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர், வேடசந்துார். .............


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ