மேலும் செய்திகள்
சீமைக்கருவேல மரங்கள் அகற்ற கூட்டு முயற்சி தேவை
03-May-2026
குப்பை இல்லாத கொடைக்கானலை உருவாக்குவதே இலக்கு. சோலைகளையும், வனங்களையும் பாதுகாத்து பரிசளிப்பதே இயற்கைக்கு செய்யும் கைமாறு என செயல்படும் சோலைக்குருவி அமைப்பின் பொதுநல சேவை நிச்சயம் பாராட்ட வேண்டியது. வானுயர்ந்த சோலைக்காடுகளில் பசுமையை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு 6 ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் சோலைக்குருவி அமைப்பு துவங்கப்பட்டது. பொதுவெளியில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளை அகற்றி இயற்கையை பாதுகாக்க வேண்டும் எனும் இலக்கில் குவியமாக செயல்படும் இந்த அமைப்பினர், கொடைக்கானலை சுற்றியுள்ள வன நிலங்களில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள், இதர குப்பைகளை அகற்றி வன நிலங்களை பளிச்சிட செய்கின்றனர். சேகரிக்கும் குப்பைகள் எப்படியும், மற்றுமொரு இடத்தில் நிலத்திற்கு பாரமாக, வளத்தை மட்க செய்யும் விஷமாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்து, இரும்பினால் அமைக்கப்பட்ட மான், மயில், யானை, இயற்கை சார்ந்த மாடல்களில் பிளாஸ்டிக் கழிவுகளை நிரப்பி விழிப்புணர்வு அம்சமாக மாற்றி உள்ளனர். இயற்கை பாதுகாப்பதன் அவசியம், பறவைகள், சதுப்பு நிலங்கள் என வாழிட சுழற்சி முறைகள் குறித்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, கொடைக்கானல் நிலம் சார்ந்த மரங்கள், அதன் பண்புகள், பயன்கள் குறித்து நுால் வெளியிட்டும் சேவை செய்து வருகின்றனர். இவர்களின் முயற்சியின் பேரில் கொடைக்கானல் வனப்பகுதியில் இருந்து இதுவரை 30 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. சுய மாற்றமே, சமூக மாற்றத்திற்கு வித்திடும் என்பதற்கு உதாரணமாக செயல்படும் சோலைக்குருவி அமைப்பினருடன், தற்போது தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலரும் பங்களிப்பு செய்வது பாராட்டுதலுக்குரியது. அரியவகை மரங்கள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் மரிய லியோ: தன்னார்வலர்கள் இணைந்து சோலைக்குருவி அமைப்பை ஏற்படுத்தினோம். 120 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதுவரை 55 மாத நிகழ்வுகள் நடத்தி இருக்கிறோம். எங்களுடன் அரசு கலைக்கல்லுாரி, சில தனியார் பள்ளி மாணவர்களும் இணைந்து செயல்படு கின்றனர். சுற்றுலா நகரான கொடைக்கானலில் சோலைக்காடுகளை அழகுற பராமரித்து அரியவகை மரங்களை பாதுகாப்பதே எங்களின் முக்கிய நோக்கம். வனங்களில் குப்பைகளை அகற்றும் பணியின்போது கிடைத்த நாட்டுரக அரிய வகை மரக்கன்றுகள், காயம்பட்ட வன விலங்குகளை மீட்டு உரிய இடத்தில் ஒப்படைத்திருப்பது, இயற்கை சேமிப்புக்கு கிடைத்த போனஸ் பாயிண்டுகளாக தோன்றும். எங்களின் கவனத்துக்கு வந்த இடங்களை கடந்து, கொடைக்கானலில் விரிவான அளவில் சேவை செய்ய ஆசை உள்ளது. வனத்துறை, பொதுமக்கள், தன்னார்வலர்கள் ஒத்துழைப்பு கிடைத்தால் நிச்சயம் சோலைக்குருவி அமைப்பு மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவோம். குப்பையில்லா கொடைக்கானல் என்பதே எங்களின் இறுதி இலக்கு.
03-May-2026