உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மண்டல வாரியாக மருத்துவ கல்வி இயக்குனர் பணியிடம் உருவாக்கம்: அரசு டாக்டர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு

மண்டல வாரியாக மருத்துவ கல்வி இயக்குனர் பணியிடம் உருவாக்கம்: அரசு டாக்டர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு

திண்டுக்கல்: அரசு மருத்துவக் கல்வி இயக்ககத்தை மறுசீரமைத்து மண்டல வாரியாக நான்கு மருத்துவக் கல்வி இயக்குனர் பதவிகளை உருவாக்க மாநில சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது 36 மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. சென்னையில் இருந்து ஒரே நபரால் இவற்றை நிர்வகிப்பது கடினம் என்ற முடிவின்படி மருத்துவக் கல்வி இயக்ககத்தை மறுசீரமைத்து மண்டல வாரியாக நான்கு மருத்துவக் கல்வி இயக்குனர் பதவிகளை உருவாக்க மாநில சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. நான்கு மண்டலத்தில் மருத்துவக் கல்வி இயக்குனர் பணியிடங்களை உருவாக்கி இளநிலை, முதுநிலை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ, பல் மருத்துவ திட்டங்கள், துணை மருத்துவ திட்டங்களை நிர்வகிப்பதுடன் மருத்துவமனைகளில் நோயாளி பராமரிப்பு, உள்கட்டமைப்பு, மனிதவளம் ஆகியவற்றையும் மேற்பார்வையிடும் வகையில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்ய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு டாக்டர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசு டாக்டர்கள் சங்கத்தினர் கூறியதாவது: மருத்துவர் அமைப்புகளுடன் கலந்தாலோசிக்காமல் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசையும், சுகாதாரத் துறையையும் கேட்டுக்கொள்கிறோம். எளிமையான நடைமுறையை சுகாதாரத்துறை தேவையின்றி சிக்கல் ஆக்குவதாக தோன்றுகிறது. மருத்துவக் கல்வி இயக்குனர் பதவிக்கு 2026 மார்ச் 15க்கு முன்பே பதவி மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ளவர்களில் இருந்து இயக்குனரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் மூப்புப் பட்டியலில் சுகாதாரத்துறை மேலும் பல டீன்களை சேர்த்து அவர்களையும் நேர்காணலுக்கு அழைத்துள்ளது. கல்லுாரிகளை ஏற்கனவே டீன்கள் நிர்வகித்து வருகின்றனர். எனவே அவர்களுக்கும் மருத்துவக் கல்வி இயக்குனருக்கும் இடையே எந்த இடைநிலை அமைப்பும் தேவையில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !