உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாவட்டத்தில் வனவிலங்குகள் வேட்டை அதிகரிப்பு! வன வளம் காக்க தடுப்பில் வேண்டும் தீவிரம்

மாவட்டத்தில் வனவிலங்குகள் வேட்டை அதிகரிப்பு! வன வளம் காக்க தடுப்பில் வேண்டும் தீவிரம்

திண்டுக்கல் மாவட்டம் இயற்கையாகவே வனப்பரப்பை அதிகம் கொண்ட மாவட்டம். சிறுமலை, கொடைக்கானல், பழநி உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் வனப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கிறது. இதனால் வெளி மாவட்ட, மாநில, நாடுகளில் அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். கீழ்மலை, மேல் மலை, தாண்டிக்குடி, கன்னிவாடி, ஆடலூர், ஒட்டன்சத்திரம் என தோராயமாக 1,662 சதுர கிலோமீட்டர் வன பரப்பளவைக் கொண்ட மாவட்டத்தில் சமீபகாலமாக வனவிலங்கு வேட்டை அதிகரித்துள்ளது. காடுகளின் இயல்பு மாறாமல் இருப்பதற்கு அவற்றை வாழிடமாக கொண்டுள்ள வனவிலங்குகள் முக்கிய காரணம். கரடி, யானை, மிளா, மான், காட்டெருமை, காட்டுபன்றி உள்ளிட்ட இன்னும் பல அரிய உயிரினங்களும், வனவிலங்குகளும் நிரம்பி இருக்கும் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் நபர்கள், சுய லாபத்திற்காகவும், வியாபார நோக்கத்திற்காகவும் வனவிலங்குகளை வேட்டையாடுகின்றனர். இதனால் வன சமநிலை கெடுவதோடு வனவளமும் அழிக்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட உயிரின பட்டியலில் உள்ள காட்டுப்பன்றிகள், யானை போன்றவை மாமிசத்துக்காவும், தந்தங்களுக்காவும் கொல்லப்படுவதால், எண்ணிக்கை குறைகிறது. பெரும்பாலும் முயல், மான் வேட்டைக்காக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைபவர்கள் வேட்டை நாய்களை பயன்படுத்தியும், பொறி வைத்தும், துப்பாக்கியால் சுட்டும் வேட்டையாடுகின்றனர். சிலர் நாட்டு வெடிகுண்டுகள் வீசி வேட்டையாடுகின்றனர்.இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது வனத்துறை நடவடிக்கை எடுத்தாலும், அவை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படாமல் அபராதத்தோடு நின்றுவிடுவதால் விலங்கு வேட்டை தொடர்கதையாகிறது. இதனை தடுப்பதற்கு வனத்துறையில் போதுமான வேட்டை தடுப்பு காவலர்களை நியமிக்க வேண்டும். ரோந்து அதிகரிப்பதோடு வன உயிரினங்கள், விலங்குகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி ஊடுருவலையும், வேட்டைக் காரர்கள் நடமாட்டத்தையும் தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ