பரோட்டா மாஸ்டர் மகனுக்கு எம்.பி.பி.எஸ்., சீட் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லுாரியில் இடம்
திண்டுக்கல்: அரசுப்பள்ளியில் படித்த விருதுநகர் மாவட்ட மாணவர் கணேஷ்குமாருக்கு தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் திண்டுக்கல் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்துள்ளது. இவரது கிராமத்திலிருந்து எம்.பி.பி.எஸ்., படிக்க தேர்வாகியிருக்கும் முதல் மாணவர் இவர். கணேஷ்குமார் கூறியதாவது: ராஜபாளையம் ஒன்றியம் வெம்பக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட நரிக்குளம் எனது சொந்த ஊர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிவலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்தேன். அந்த கல்வி ஆண்டிலேயே மருத்துவம் படிப்பதற்காக நீட் எழுதினேன். தேர்ச்சி பெறவில்லை. மருத்துவம் படித்தே ஆகவேண்டும் என்ற லட்சியத்துக்காக நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கு சென்று படித்தேன். மதுரை, சேலத்தில் இரண்டு ஆண்டுகள் தங்கி பயிற்சி பெற்றேன். இந்தாண்டு நடந்த நீட் தேர்வில் கலந்துகொண்டு 454 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றேன். கலந்தாய்வில் தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் எனக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரியில் மருத்துவம் படிக்க ஒதுக்கீடு கிடைத்துள்ளது. எனது குடும்பம் ஏழ்மையானது. அப்பா கிருஷ்ணசாமி பரோட்டா மாஸ்டர். அம்மா ஜெயந்தி ஸ்பின்னிங் மில்லில் தினக்கூலி வேலைக்கு செல்கிறார். உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரியும், சகோதரனும் உள்ளனர். சகோதரி நர்சிங் முடித்துள்ளார். அவரை பார்த்தே எனக்குள் டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை வந்தது. எங்கள் ஊரிலிருந்து எம்.பி.பி.எஸ்., படிக்கவிருக்கும் முதல் நபர் நான்தான். இதை ஊர் மக்கள் எல்லோருமே வியந்து பாராட்டியது எனக்கு பெரிய ஊக்கமாக உள்ளது என்றார்.