ஜாதி சான்றிதழ் கேட்டு மாணவர்கள் மறியல்
திண்டுக்கல்: குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க பள்ளி சீருடையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்த மாணவர்கள் குடும்பத்தினர் ஜாதி சான்றிதழ் கேட்டு மறியல் செய்தனர். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டதில் பங்கேற்று மனு அளிக்க வட மதுரையை அடுத்த வாலிசெட்டிபட்டியை பகுதியில் வாழும் பட்டியலினத்தவர்கள் 50-க்கு மேற்பட்டோர் இவர்களின் குழந்தைகளை பள்ளி சீருடையோடு அழைத்து வந்தனர். பள்ளியில் படிக்கும் தங்களின் குழந்தைகளுக்கு காட்டுநாயக்கர் ஜாதி சான்றிதழ் வழங்கக்கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள ரோட்டில் மறியல் செய்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அவர்களை சமாதானம் செய்தனர். கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசுகையில், எங்களது காட்டுநாயக்கர் சமூகத்திற்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி பல ஆண்டாக போராடுகிறோம். அதிகாரிகளிடமும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஜாதி சான்றிதழ் இல்லாததால் எங்கள் குழந்தைகள் மேற்படிப்புக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். தமிழக அரசு எங்களுக்கு காட்டுநாயக்கர் ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றனர். வருவாய்த் துறை அதிகாரிகள், போலீஸ் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்ந்து கலைந்தனர்.