மலைகளில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு; விளைநிலங்களில் நடமாட்டம் அதிகரிப்பு
சின்னாளபட்டி : ஏ.வெள்ளோடு, வலையபட்டி மலையடிவார கிராமங்களில், வனவிலங்குகள் நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.சிறுமலை பகுதியில் வன உயிரினங்களுக்கு தேவையான தண்ணீர் ஆதாரங்கள் போதியளவு இல்லை. இதனால், தண்ணீர் தேவைக்காக மலையடிவார கிராமங்களான ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, கல்பட்டி, வலையபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வன உயிரினங்களின் நடமாட்டம் சில நாட்களாக அதிகரித்துள்ளது.இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'சில ஆண்டுகளாக அடிவார பகுதியில் கிடைத்த பலவகை தீவனம், சாகுபடிக்காக தேக்கி வைத்த தண்ணீர் தொட்டிகள் போன்றவை இவற்றுக்கான பழக்கமான வழித்தடத்தில் அமைந்துள்ளன. சிறுமலை பகுதியில் உணவு கிடைத்தபோதும், தண்ணீருக்காக அடிவார கிராமங்களுக்கு அதிகளவில் வரத் துவங்கியுள்ளன. விளைநில சாகுபடி மட்டுமின்றி கால்நடைகளுக்காக சேகரித்துள்ள தீவனங்களை முழுமையாக சேதப்படுத்துகின்றன'என்றனர்.