ஆர்டர் கொடுத்த இலவச வேட்டி, சேலைகளைகொள்முதல் செய்யாமல் கூட்டுறவு துறை டிமிக்கி
ஆர்டர் கொடுத்த இலவச வேட்டி, சேலைகளைகொள்முதல் செய்யாமல் கூட்டுறவு துறை டிமிக்கிஈரோடு:கடந்த பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணி முடிந்தும் தலா, 35 லட்சத்துக்கும் மேலான வேட்டி, சேலைகளை வருவாய் துறை, கூட்டுறவுத்துறை கொள்முதல் செய்யாமல் உள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது, ரேஷன் கடைகள் மூலம் வழங்க கடந்தாண்டு, 1 கோடியே, 77 லட்சத்து, 22,995 வேட்டிகள், 1 கோடியே, 77 லட்சத்து, 64,471 சேலைகள் உற்பத்திக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த பொங்கல் பண்டிகையின்போது, 80 சதவீத வேட்டியும், 60 சதவீத சேலையும் உற்பத்தி செய்த நிலையில் வரும், 31 வரை ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலைகளை பயனாளி கள் பெறலாம் என, அரசு அறிவித்தது. தாமதமாக உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி, சேலைகள் ஈரோடு, திருச்செங்கோடு உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள விசைத்தறியாளர்கள் கூட்டுறவு சங்க குடோன்களில் உள்ளன.இதுபற்றி, விசைத்தறியாளர்கள் கூறியதாவது:கடந்த ஜன., 31க்கு பின் உற்பத்தியான தலா, 35 லட்சம் வேட்டி, 35 லட்சம் சேலைகள் கைத்தறி துறை குடோனில் தரம் சரி பார்ப்புக்கு கூட செல்லாமல், சொசைட்டி குடோன்களில் இருப்பு வைத்துள்ளனர்.இவற்றை ரேஷன் மூலம் வினியோகம் அல்லது பிற இடர்பாடு நேரத்தில் மக்களுக்கு வழங்குவதற்காக வருவாய் துறையினர் கொள்முதல் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு, 3 தொகுதியாக உற்பத்தி செய்த வேட்டி, சேலைகளை கொள்முதல் செய்தனர். 4வது தொகுதியாக உற்பத்தியானவை கொள்முதல் செய்யாததால், அதற்கான கூலி வருவதிலும் தாமதம் ஏற்பட்டு, வேட்டி, சேலைகள் பயனாளிகளுக்கு சென்றடைவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.விரைவில் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.