பொய்த்துப்போன அந்தியூர் தொகுதி சென்டிமென்ட்
அந்தியூர்:அந்தியூர் தொகுதி சென்டிமெண்ட் பொய்த்துப்போனது, வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,வுக்கு மட்டுமின்றி, தொகுதி மக்களுக்கும் ஏமாற்றத்தை தந்துள்ளது. அந்தியூர் தொகுதியில் தி.மு.க., சார்பில், சிவபாலன், அ.தி.மு.க.,வில் ஹரி பாஸ்கர், த.வெ.க.,வில் விஜய் வெங்கடேஷ் களம் கண்டனர். வேட்பாளர் அறிவிக்கப்பட்டது முதலே, இரு திராவிடக் கட்சிகளில் ஏதாவது ஒன்று, குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்பதே, கட்சியினரின் எதிர்பார்ப்பாக இருந்தது.இதை மெய்ப்பிக்கும் வகையில் அ.தி.மு.க.,வின் ஹரிபாஸ்கர், 60,042 ஓட்டுகள் பெற்று, 1,260 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தி.மு.க.,வின் சிவபாலன், 58,782 ஓட்டு பெற்று, இரண்டாமிடத்தை பிடித்தார். த.வெ.க.,வின் விஜய் வெங்கடேஷ், 58,372 ஓட்டுக்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றார். தி.மு.க., வேட்பாளர், 1,620 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.இதில் குறிப்பாக கடந்த தேர்தலில் தி.மு.க., வென்று எம்.எல்.ஏ.,வான வெங்கடாசலம், கட்சி வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி, பலப்படுத்தி வைத்திருந்தார். இந்த முறையும் அவருக்கு 'சீட்' ஒதுக்கப்படலாம் என பேசப்பட்ட நிலையில், சிவபாலனுக்கு வாய்ப்பு போனது.இதனால் அந்தியூர் நகரம், கிராமங்களில், எம்.எல்.ஏ.,வின் விசுவாசிகளாக இருந்த பலர், தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்காதது முக்கிய காரணமாக பேசப்படுகிறது. எம்.எல்.ஏ.,வுக்காக விழும் என்று நினைத்த வன்னியர் சமுதாய ஓட்டுக்களும், அன்புமணியை வலுப்படுத்தும் நோக்கில் அ.தி.மு.க., பக்கம் சாய்ந்தது. மேலும் ஒவ்வொரு 'பூத்'திலும் கணிசமான தி.மு.க., ஓட்டுக்கள், த.வெ.க.,வுக்கு விழுந்ததும், அக்கட்சியின் வெற்றியை பறித்து விட்டது.இதை விட, அந்தியூர் தொகுதியில் எந்த கட்சி வேட்பாளர் வெற்றி பெறுகிறாரோ, அந்தக்கட்சிதான் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும். தற்போது அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றாலும், அக்கட்சி மூன்றாமிடத்தைதான் பிடித்துள்ளது. இதனால் ஆட்சி அமைக்க முடியாத நிலையே உள்ளது. எனவே தொகுதியின் சென்டிமென்ட் பொய்த்து விட்டதாக, அனைத்து கட்சியினர் மத்தியிலும் பேச்சு எழுந்துள்ளது.