அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் தொடங்கியது
ஈரோடு, தமிழகம் முழுவதும், நகர்பகுதி அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், காலை உணவு திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.இதன்படி ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு ரயில்வே காலனி புனித ரீட்டா அரசு நிதியுதவி தொடக்க பள்ளியில், காலை உணவு திட்டத்தை, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். மாணவ, மாணவியருடன் அமர்ந்து அமைச்சர் சாப்பிட்டார். அமைச்சருடன் கலெக்டர் கந்தசாமி, எம்.பி.பிரகாஷ், எம்.எல்.ஏ. சந்திர குமார், மேயர் நாகரத்தினமும் சாப்பிட்டனர். நிகழ்வின் போது தங்கள் அருகில் அமர்ந்திருந்த மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர், எம்.பி., உள்ளிட்டோர் உணவை ஊட்டி மகிழ்ந்தனர். இதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில், 1,169 பள்ளிகளின், 55,942 மாணவ, மாணவியர் காலை உணவை சாப்பிடுகின்றனர்.நிகழ்ச்சியில் தி.மு.க., செயலாளர் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், மண்டல தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.