குடிபோதை ஆசாமிகளால் தர்மசங்கடத்தில் வேட்பாளர்கள்
அந்தியூர்:தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், அந்தியூர் தொகுதியில் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் என்றாலே குடிமகன்களுக்கு 'குஷி' தான். போதையில் ஆட்டம் போடுவது, கூட்டத்தில் ரகளையில் ஈடுபடுவது, சேட்டைகள் செய்வது வாடிக்கையான ஒன்று. இவர்களை தடுப்பதிலும் கட்சியினர் ஆர்வம் காட்டாதது, ஊக்கப்படுத்துவதாக அமைந்து விடுகிறது. அந்தியூர் அருகே ஒரு கட்சி பெண் வேட்பாளர், ஆதரவாளர்களுடன் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, 55 வயது குடிமகன் ஒருவர், கையில் மது பாட்டிலுடன் வந்தார். வேட்பாளரை பார்த்து, 'இது தி.மு.க.,காரங்க இருக்கற ஏரியா, இங்கெல்லாம் ஓட்டு கேட்க வரக்கூடாது' என்றார். மது பாட்டிலை ஒரு கையில் உயர்த்தி பிடித்தும், மற்றொரு கையில் ஒற்றை விரலை மடித்தும் விசிலடித்து ஆட்டம் போட்டார். இதைப்பார்த்த வேட்பாளர், எங்கள் தலைவர் கூறியது போல, தமிழக மக்கள் மதுவுக்கு அடிமையாகவில்லை, பைத்தியமாகிவிட்டனர் என்பது உண்மைதான், என பேசியபடி கிளம்பி விட்டார். இப்படிப்பட்ட 'முரட்டு குடிமகன்'களால், வேட்பாளர்கள் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.