உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்

கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்

ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, கோவில்களில் தீபம் ஏற்றும் விழா, வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. ஈரோட்டில் கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், நேற்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.முன்னதாக உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டி, கோவில் முன் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு கோவில் முன்புள்ள தீபத்துாணில் சிவாச்சாரியர்கள் தீபம் ஏற்றினர்.அதை தொடர்ந்து கஸ்துாரி அரங்கநாதர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்து, கோவில் முன்புள்ள தீபத்துாணில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டது.பல ஆண்டுகளுக்கு பிறகு இருகோவில்களிலும் ஒரே நாளில் கார்த்திகை தீபம் ஏற்றியது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடந்தது. தீபத்தை கண்டுகளித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், இதையும் பக்தி கோஷம் முழங்க பார்வையிட்டனர்.இதேபோல் திண்டல் வேலாயுத சுவாமி கோவில், சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், புன்செய்புளியம்பட்டி சுப்ரமணிய சுவாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் தீபம் ஏற்றும் நிகழ்வு, வழக்கமான உற்சாகத்துடன் நடந்தேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ