சென்னிமலை நகரின் நடுநாயகமாக நான்கு மாடவீதிகளுடன் விளங்கும் சிவாலயம். இக்கோவில் சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவில் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட உப கோவிலாகும். மலை கோவில் போலவே இதுவும் தொன்மையானது. கமலாலயம் என்றும் அழைக்கப்படுகிறது.சரவணமா முனிவர் மலைகோவில் கட்டியதுடன் மலையடிவாரத்தில் நகரம் தோற்றுவித்து, கைலாசநாதர் கோவில் கட்டி, அங்கு அழகிய கனகசபையில் வள்ளி--தெய்வானையுடன் முருகப்பெருமானை எழுந்தருள செய்தார் என தல புராணம் கூறுகிறது. கோவில் முன் அரசடி விநாயகர் சன்னதி உள்ளது. கொங்கு நாட்டு முறைப்படி தீபத்தம்பம் கோவிலுக்கு வெளியே அழகிய சிற்ப வேலைப்பாடமைந்த மண்டபத்துடன் உள்ளது. முன்மண்டப துாண்களில் சிவன் ஊர்த்துவத்தாண்டவம், காளி, சிவபெருமான் யானை உரிபோர்த்தல் முதலிய சிற்பங்கள் அழகுடன் திகழ்கின்றன.இடப்புறம் அம்மன் பெரியநாயகி சன்னதி உள்ளது. மண்டபத்துாண்களில் நாகலிங்கம், அன்னம், முருகன், யானை, வில், இடும்பன், நந்தி, ரிஷபவாகனம், சுந்தரர் சிற்பங்கள் உள்ளன. அவினாசியில் சுந்தரர் முதலையுண்ட பாலனை வரவழைக்கும் சிற்பம் உள்ளது. இங்கும் கருடன், காளிங்க நடனம், குழல்ஊதும் கண்ணன் சிற்பங்கள் உள்ளன.கன்னி மூலை விநாயகர் கோவில் உள்ளது. வள்ளி, தெய் வானையுடன் முத்துக்குமாரசாமி முருகன் சன்னதி உள்ளது. அம்மன், முருகன் சன்னதி கட்குக் கோயிலின் உள் தனி தீபத்தம்பம் உள்ளது. அழகிய கனகசபையில் நடராசர் எழுந்தருளியுள்ளார். இக் கனகசபை மண்டபம் கட்டியவர் குருமூர்த்திசெட்டியார், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்திக்கு தனிச்சன்னதிகள் உள்ளன.கிழக்கு முகமான கோவிலாக இருந்தாலும் நகர மக்கள் வசதிக்காக மேற்கிலும் வாயில்உள்ளது. இக் கோவிலை நிலத்தம்பிரான் கோவில் என்றும், மலைக்கோவிலை மலைத் தம்பிரான் கோவில் என்றும் அழைப்பர்.இக் கோவிலின் மேற்குப் பிரகாரத்தில் பஞ்சலிங்க சன்னதிகள் உள்ளன. பழந்தமிழர்கள் தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும், எவ்வுலகுக்கும் இறைவன் என்பதை அறிவிக்கு முகத்தான் சைவர்கள் பஞ்சபூதங்களையும் இலிங்கவடிவில் வணங்கினர். அதற்கு பிருத்விலிங்கம் (நிலம்) அப்புலிங்கம்(நீர்), தேயுலிங்கம் (தீ), வாயுலிங்கம் (காற்று), ஆகாசலிங்கம் (ஆகாயம்) என்று பெயரிட்டனர். கைலாசநாதர் ஆலயத்தில் மேற்கு பிரகாரத்தில் இப்பஞ்சலிங்கங்களும் எழுந்தருளியிருப்பது சிறப்பு மிக்கதாகும். இந்த பஞ்சலிங்கங்களை வழிபட்டால் ஐந்து தலங்கட்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.உள் மண்டப பகுதியில் நவக்கிரக சன்னதியும், வடக்கு பிரகார பகுதியில் தெற்கு நோக்கி நடராச பெருமான் சன்னதி, இதையடுத்து பைரவர் சன்னதி உள்ளது. வாயில் உட்புறம் இருபுறமும் சூரியர்,சந்திரர் உள்ளனர்.சனிமூலை எனப்படும் வடகிழக்கு மூலையில், சனி பகவான் சன்னதி அமைந்திருப்பது மிக பொருத்தமானதாகும்.