அனிதா ராதாகிருஷ்ணன் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல இயலாது; செங்கோட்டையன்
கோபி:''தி.மு.க., மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல இயலாது,'' என வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம் கோபியில், 109 ஒரு கால பூஜை திருக்கோவிலுக்கு, பூஜை உபகரணங்களை நேற்று வழங்கினார். அப்போது நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.* அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தின் இரண்டாம் கட்ட பணி குறித்து, வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?பதில்: அதற்கான ஆய்வுப்பணி நடக்கிறது. அது முடித்தபின், அதற்கான முடிவுகளை முதல்வர் மேற்கொள்வார்.* வருவாய்த்துறையில் பட்டா மாறுதலுக்கான செயலி, எப்போது பயன்பாட்டுக்கு வரவுள்ளது?பதில்: பத்திரப்பதிவு பதிவு செய்யும் அனைவரும், வில்லங்கம் இல்லாமல், பாகப்பிரிவினை இல்லாமல், முழுமையாக பத்திரப்பதிவு செய்யும் போது, அவர்களின் குடும்பத்தார் நேரடியாக பயன்பெறும் ஆணையை, முதல்வரின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு செய்தவுடன், வட்ட அதிகாரிகளை அணுக தேவையில்லை. நேரடியாகவே அதற்கான ஆவணங்கள் கிடைக்கும் வகையில் மாற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.* த.வெ.க., தேர்தல் அறிக்கையில், 40 ஆண்டுகளாக, புறம்போக்கில் குடியிருப்போருக்கு, பட்டா வழங்கப்படும். அதில் மின் இணைப்போடு இருப்பவர்களுக்கு, உடனே பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டதே?பதில்: பொதுவாக நத்தம் புறம்போக்கு, மாற்று இடத்தில் குடியிருப்பவர்கள் குறித்து, ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இவர்களுக்கு விரைந்து பட்டாக் வழங்க ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கி வருகிறோம். முழுமையாக தாசில்தாரே அனைத்து பொறுப்புகளையும் ஏற்று, பணியாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. அதை மாற்றி அமைக்க வேண்டி, முதல்வரின் ஒப்புதலுக்காக துறை ரீதியாக விபரங்களை அனுப்பியுள்ளோம். சமூக பாதுகாப்பு திட்டம், முதியோர் பென்ஷன், ரேஷன் கார்டு, ஜாதிச்சான்று என அனைத்து சேவைகளுக்கும், ஆன்லைன் மூலம், தாசில்தாரரையே பயன்படுத்தி கொள்ளலாம் என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. * கொடநாடு கொலை வழக்கில், கடந்த தி.மு.க., ஆட்சியில், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படுமா?பதில்: முதல்வர் முடிவு செய்வார்.* த.வெ.க., ஆட்சி இன்னும், இரண்டு மாதங்களுக்கு கூட தாங்காது என தி.மு.க., முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தனது பதவியை ராஜினாமா செய்து, த.வெ.க.,வில் இணைய வற்புறுத்தியதாக புகார் தெரிவித்துள்ளாரே?பதில்: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோர் வருகை தந்துதான் த.வெ.க., ஆட்சியை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை இன்றைக்கு இல்லை. அவதுாறாக பேசியதற்காக, உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டிருந்தார். அது அவருக்கு வழங்கப்படவில்லை. அவர் மீது வழக்குப்பதிவு செய்தபின் எதையோ பேசுகிறார். அந்த கருத்துக்கெல்லாம் நம்மால் பதில் சொல்ல இயலாது. * தமிழகத்தில் வரும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில், த.வெ.க.,வுக்கு ஆதரவு கொடுத்த கட்சிகள் கூட்டணியில் இணைந்து போட்டியிடுமா?பதில்: கூட்டணி கட்சியினர் நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையில் மனம் விட்டு பேசினார்கள். அதற்கான கருத்துக்களை இப்போது வெளியிட இயலாது. இவ்வாறு அவர்கூறினார்.