ஆப்பக்கூடல் போலீஸ் ஸ்டேஷனுக்கு குண்டு மிரட்டல் விடுத்த பெரிசு கைது
பவானி, ஈரோடு மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று முன்தினம் மாலை ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், ஆப்பக்கூடல் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் புரளி என்பது தெரிய வந்தது. அழைப்பு வந்த மொபைல் எண்ணை டிரேஸ் செய்ததில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கக்குச்சி பகுதி குணசேகரன், 77, என தெரிய வந்தது. அவரை தேடி வந்த நிலையில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் போலீசார் நேற்று பிடித்தனர். அவரது மனைவியான ஆப்பக்கூடலை சேர்ந்த பெண், பிரிந்து வசிக்கிறார். அவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி, போலீசாருக்கு தபாலில் மனு அனுப்பியுள்ளார். போலீசார் பெண்ணை அழைத்து விசாரித்ததில், சேர்ந்து வாழ விரும்பவில்லை என கூறியுள்ளார். இதனால் போலீசார் கண்டு கொள்ளாத நிலையில், மது போதையில் இருந்த குணசேகரன், போலீஸ் ஸ்டேஷனுக்கு குண்டு மிரட்டல் விடுத்துள்ளார். வழக்குப்பதிவு செய்த ஆப்பக்கூடல் போலீசார், அவரது உடல் நலன் கருதி எச்சரித்து அனுப்பினர்.