உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெருந்துறை-சென்னிமலை 4 வழிச்சாலை பணி நிறுத்தம் ஒப்பந்ததாரரே கூடுதலாக 30 சதவீதம் கேட்பதால் சிக்கல்

பெருந்துறை-சென்னிமலை 4 வழிச்சாலை பணி நிறுத்தம் ஒப்பந்ததாரரே கூடுதலாக 30 சதவீதம் கேட்பதால் சிக்கல்

சென்னிமலை:ஒப்பந்ததாரரே கூடுதலாக 30 சதவீதம் கேட்பதால், பெருந்துறை-சென்னிமலை இடையிலான, நான்கு வழிச்சாலை பணி நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சரக்கு லாரிகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள், சேலம், பெருந்துறை வந்து பின்னர் சென்னிமலை வழியாக பழனி போன்ற ஆன்மிக தலங்கள் மற்றும் திண்டுக்கல், மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்வது வழக்கம். இதனால் பெருந்துறை, சென்னிமலை மற்றும் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வரை கடும் போக்குவரத்து நெருக்கடி, அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நேரிட்டது. தைப்பூசம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் சென்னிமலை நகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்னிமலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும், 2025 மே மாதத்தில் இரவு, பகலாக இரு நாட்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. இதில் சாதாரண நாட்களில், 15 நிமிடங்களுக்குள் கார், பைக் மற்றும் கனரக வாகனங்கள் என, 250 வாகனங்கள் சாலையை கடப்பது தெரிய வந்தது. நாளடைவில் இந்த வாகனங்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர வாய்ப்புள்ளது என்பதால், பெருந்துறையில் இருந்து சென்னிமலை வழியாக நான்கு வழிச்சாலையாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், சென்னிமலை நகரில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில், சென்னிமலையை சுற்றி புறவழிச்சாலை அமைக்கவும் முடிவு செய்து, நில அளவீடு செய்யும் பணி நடந்தது.இந்த நிலையில் பெருந்துறையில் இருந்து சென்னிமலை வழியாக தாராபுரம், பழனி மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் பெருந்துறை - சென்னிமலை இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்க முடிவு செய்து கடந்த தி.மு.க., ஆட்சியில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில், 65 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்துறை ரவுண்டானாவில் இருந்து சென்னிமலை அருகே பிடாரியூர் நால்ரோடு வரை, சென்னிமலைக்கு தெற்கே பசுவபட்டி பிரிவில் இருந்து நொய்யல் அத்திக்காடு வரை, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை கடந்த பிப்., மாதம் ஈரோடு கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து பணி தீவிரமாக நடந்த நிலையில், 20 நாட்களாக பணியை அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர்.சாலைகளை அகலப்படுத்த சாலையின் இரு ஓரங்களிலும் பள்ளம் தோண்டி மூடாமல் உள்ளது. தாழ்வான இடங்களில் பாலங்கள் கட்ட, பாதி சாலையை அடைத்து பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் எங்கு பார்த்தாலும் புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது.இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:ஒப்பந்ததாரர் டெண்டர் தொகையை விட, 30 சதவீதம் கூடுதல் தொகை தர வேண்டும் என கடிதம் கொடுத்து பணிகளை நிறுத்தியுள்ளார். ஒப்பந்ததாரருக்கு ஒரு மாதம் மட்டுமே காலக்கெடு உள்ளது. அவர் மறுத்துவிட்டால் வேறு டெண்டர் கோரப்பட்டு பணி நடக்கும். இவ்வாறு கூறினார்.அதேசமயம் கடந்த தி.மு.க., ஆட்சியில் விடப்பட்ட டெண்டர் என்பதால், 'பார்டி பண்ட்' கொடுக்கப்பட்டிருக்கலாம். இதனால் கட்டுப்படியாகாமல் ஒப்பந்ததாரர், வேலையை பாதியில் நிறுத்தி இருக்கலாம் என்றும், அரசியல் கட்சியினர் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !