ஜி.எச்.,ல் டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு, நவ. 15-சென்னையில் கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணி முதல் தனியார், அரசு மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.டாக்டரை தாக்கிய நபருக்கு கூடுதல் தண்டனை பெற்றுத்தர வேண்டும். மருத்துவமனை, டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக்க வலியுறுத்தி, ஈரோடு மாவட்டத்திலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்தனர். ஈரோடு அரசு மருத்துவமனையில் வேலை நிறுத்தத்தில் டாக்டர்கள் ஈடுபட்டு, ஆர்ப்பாட்டமும் செய்தனர்.ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க செயலாளர் அடைக்கலம் கூறியதாவது: ஈரோடு அரசு மருத்துவமனையில், 85 டாக்டர்கள் உட்பட மாவட்ட அளவில் உள்ள, 8 அரசு மருத்துவமனைகளிலும் சேர்த்து, 150க்கும் மேற்பட்ட டாக்டர்களும், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரியில், 100 டாக்டர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி செய்யும், 150க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு மட்டும் இயங்கியது. மற்ற பணிகளில் டாக்டர்கள் ஈடுபடவில்லை. இவ்வாறு கூறினார்.அதேநேரம், நிர்வாக பணியில் உள்ள கண்காணிப்பு அதிகாரி டாக்டர் வெங்கடேசன், காய்ச்சல் நோய் பிரிவிலும், உறைவிட மருத்துவர் சசிரேகா பொதுப்பிரிவிலும் சிகிச்சை வழங்கினர். இதுபோல சுழற்சி முறையில், 12 டாக்டர்களும், அரசு மருத்துவ கல்லுாரி பயிற்சி டாக்டர்கள் மூலம் குறைந்தபட்ச சிகிச்சை வழங்கப்பட்டது. மாவட்ட அளவில், 400 தனியார் மருத்துவமனைகள், இவற்றில் பணி செய்யும், 2,000 டாக்டர்களும் வேலை நிறுத்தம் செய்தனர். போராட்டத்தால் விரைவான சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் சிரமப்பட்டனர்.