வாய்க்கால்மேட்டில் ரேஷன் கடை திறப்பு
ஈரோடு :ஈரோடு அருகே, சித்தோடு வாய்க்கால்மேடு பகுதியில் அமைக்கப்பட்ட முழு நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.சித்தோடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம், முழு நேர ரேஷன் கடை குமிளம்பரப்பில் செயல்படுகிறது. அதில் இருந்து, 356 ரேஷன் கார்டுகளையும், இச்சங்கம் நடத்தும் ராயபாளையம் புதுார் முழு நேர ரேஷன் கடையில் இருந்து, 447 ரேஷன் கார்டையும் சேர்த்து, 803 ரேஷன் கார்டுகளுடன் வாய்க்கால்மேடு, காந்தி நகர் என்ற இடத்தில் முழு நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டது. இக்கடையை நேற்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்து, பொருட்களை வழங்கினார். இக்கடை அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும்.ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் கந்தராஜா, கள அலுவலர் கோவிந்தன், சார் பதிவாளர் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.