இ.வி.எம்.,களில் பேலட் ஷீட் பொருத்தும் பணி நிறைவு
ஈரோடு:மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் 'பேலட் ஷீட்' பொருத்தும் பணி நிறைவு பெற்றது.ஈரோடு மாவட்டத்தில் வரும், 23ல் நடக்கவுள்ள ஓட்டுப்பதிவில், 8 லட்சத்து, 47,197 ஆண்கள், 9 லட்சத்து, 11,778 பெண்கள், 182 மூன்றாம் பாலினத்தவர் என, 17 லட்சத்து, 59,157 வாக்காளர்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் ஓட்டுப்பதிவு செய்ய, 2,379 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இறுதி வேட்பாளர்கள் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்பட்டது. ஈரோடு கிழக்கு-20, ஈரோடு மேற்கு-13, மொடக்குறிச்சி-14, பெருந்துறை-13, பவானி-14, அந்தியூர்-14, கோபி-18, பவானிசாகர்-12 என, 118 வேட்பாளர்கள் இடம் பெற்றனர்.ஈரோடு கிழக்கு, கோபி தொகுதியில் மட்டும், 16க்கும் மேல் வேட்பாளர்கள் உள்ளதால், அங்கு மட்டும் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தலா, 2 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. மற்ற தொகுதிகளில் தலா, ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம், ஒரு வி.வி.பேட் ஆகியவை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.இதன்படி, 8 தொகுதியில், 3,532 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 2,852 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,089 வி.வி.பேட் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.அந்தந்த தொகுதிகளில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கடந்த, 17 முதல் வேட்பாளர் புகைப்படத்துடன், பெயர், சின்னம் கொண்ட ரோஸ் கலரினால் ஆன 'பேலட் ஷீட்' ஓட்டும் பணி துவங்கியது. ஒவ்வொரு இயந்திரத்திலும் மிகச்சரியாக ஒட்டப்பட்டுள்ளதை, அதிகாரிகள் உறுதி செய்தனர். 'பேலட் ஷீட்'டில் உள்ளபடி மாதிரி ஓட்டுப்பதிவு செய்து, வி.வி.பேடில் பதிவான சின்னம் பிரிண்ட் அவுட் வருகிறதா என்றும், சில ஓட்டுப்பதிவுக்கு பின், சரியான எண்ணிக்கையில் ஓட்டுப்பதிவு வந்துள்ளதை உறுதி செய்து, பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி 'சீல்' வைத்தனர். அந்த அறைக்கு 24 மணி நேர சுழற்சியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.