ஓடைக்குள் கருங்கல் ஓடை எப்போது கிடைக்கும் விடை?
ஈரோடு, தமிழக மக்கள் நல கட்சி, ஈரோடு மாவட்ட செயலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:வில்லரசம்பட்டி பகுதியில் உள்ள கருவில்பாறைவலசு குளத்து உபரி நீர், பிச்சைக்காரன் பள்ளம் ஓடை வழியாக காவிரியில் கலக்கிறது. இந்த ஓடையை ஒட்டிய, 20க்கும் மேற்பட்ட சாய, சலவை, பிரிண்டிங் ஆலைகளின் சாயக்கழிவு, பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் விடப்பட்டு, காவிரியில் கலக்கிறது. பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் கருங்கல்லை வைத்து, சிறு ஓடைபோல அமைத்து சாயக்கழிவு நீரை வெளியே தெரியாமல் வைத்துள்ளனர். இந்த கருங்கல்லை அகற்ற மாநகராட்சியில் புகார் செய்யப்பட்டது. ஆனால், கல்லை அகற்றிவிட்டதாக பொய் தகவல் கூறியுள்ளனர். இன்னும் அகற்றப்படவில்லை. கற்களை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.