மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.70.41 கோடி வங்கி கடனுதவி
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, ரூ.70.41 கோடிக்கு வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி, ஏ.கே.டி., பள்ளியில் உலக மகளிர் தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிகண்ணன் மற்றும் மலையரசன் எம்.பி., முன்னிலை வகித்தனர்.இதில் கலெக்டர் பிரசாந்த் பேசியதாவது:மாவட்ட நிர்வாகம் மகளிர் முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்துகிறது. கடந்த நிதியாண்டில் மகளிர் திட்டம் சார்பில், ரூ.622 கோடி மதிப்பில் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 7,595 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.625.65 கோடி, சுய தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது.புதிய குழுக்களை உருவாக்கி, கடனுதவி வழங்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கை மேற்கொள்கிறது. நலத்திட்ட உதவிகளை பெற்று, சுய தொழில் செய்து மகளிர் வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, 636 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.70.41 கோடி வங்கி கடனுதவிக்கான காசோலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி, நகர சேர்மன் சுப்பராயலு, மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், ஒன்றிய சேர்மன்கள் சத்தியமூர்த்தி, தாமோதரன் உதவி திட்ட அலுவலர்கள் விஜயக்குமார், அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.