ரூ.40 லட்சம் புத்தகம் விற்பனை கலெக்டர் பிரசாந்த் தகவல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த கல்லை புத்தக திருவிழாவில் 40 லட்சம் ரூபாய் புத்தகங்கள் விற்பனையானதாக கலெக்டர் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலை வி.எம்.திடலில் 3வது கல்லை புத்தகத் திருவிழா கடந்த 14ம் தேதி துவங்கி, கடந்த 24ம் தேதி நிறைவடைந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, புத்தக திருவிழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு வழங்கினார். பின், அவர் பேசுகையில், 'புத்தக திருவிழாவை 38,818 பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், 2 லட்சத்து 61 ஆயிரத்து 784 பொதுமக்கள் என மொத்தம் 3 லட்சத்து 602 பேர் பார்வையிட்டனர். 40 லட்சத்து 12 ஆயிரத்து 692 ரூபாய் மதிப்பில் 58 ஆயிரத்து 112 புத்தகங்கள் விற்பனையாகின கோளரங்கை 7 ஆயிரத்து 251 மாணவர்கள் கட்டணமின்றி பார்வையிட்டனர். சிறப்பு மருத்துவ முகாமில் 945 பேர் சிகிச்சை பெற்றனர்' என்றார். விழாவில், எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், மணிக்கண்ணன், நகர்மன்ற தலைவர் சுப்ராயலு, ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, மாவட்ட பதிவாளர் ரூபியா பேகம், சி.இ.ஓ., கார்த்திகா, ஆர்.டி.ஓ., லுார்துசாமி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.