திருக்கோவிலுார் தொகுதியில் அமைச்சர் நேரில் ஆய்வு
திருக்கோவிலுார் : நெற்குணம் - அறுமலை சாலை சீரமைப்பு பணி குறித்து கலெக்டருடன் அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு செய்தார்.அரகண்டநல்லுாரில் இருந்து நெற்குணம் வழியாக அருமலை, ஏமப்பேர் கிராமங்களுக்கு தென்பெண்ணை ஆற்றையொட்டி சாலை உள்ளது. பெஞ்சல் புயல் வெள்ளத்தில் அணைக்கட்டு அருகே 1 கி.மீ., துாரத்திற்கு சாலை அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையை சீரமைப்பது குறித்து நேற்று அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு செய்தார். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.தொடர்ந்து அரகண்டநல்லுார் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே அரசு விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டு காலியாக இருக்கும் 42 ஏக்கர் திறந்தவெளி பகுதியை பார்வையிட்டார்.அதனைத் தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'தொகுதிக்கு ஒரு விளையாட்டு அரங்கம் என்ற அரசின் அறிவிப்புக்கு ஏற்ப அரகண்டநல்லுாரில் காலியாக இருக்கும் 42 ஏக்கர் அரசு நிலத்தில் மினி விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.இதன் மூலம் அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் மட்டுமல்லாது, சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த விளையாட்டில் ஆர்வம் மிக்க மாணவர்களும், இளைஞர்களும் பயன்பெறுவர்.நெற்குணம் வழியாக அருமலை, ஏமப்பேர் செல்லும் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதனை விரைவாக சீரமைத்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் சிரமத்தை போக்கி, பஸ் வசதியை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.ஆய்வின்போது திருக்கோவிலுார் நகர மன்ற தலைவர் முருகன், கள்ளக்குறிச்சி மாவட்ட துணைச் சேர்மன் தங்கம், அரகண்டநல்லுார் பேரூராட்சி சேர்மன் அன்பு, நகர செயலாளர் சுந்தரமூர்த்தி, திருக்கோவிலுார் நகர செயலாளர் கோபி கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் செல்வம், திருக்கோவிலுார் அவைத்தலைவர் குணா, முகையூர் ஒன்றிய சேர்மன் தனலட்சுமி உமேஸ்வரன், ஒன்றிய செயலாளர் பிரபு உள்ளிட்ட பலர் உடனிருந்னர்.