உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மணல் கொள்ளை தடுக்கப்படுமா? திருக்கோவிலுார் மக்கள் எதிர்பார்ப்பு!

மணல் கொள்ளை தடுக்கப்படுமா? திருக்கோவிலுார் மக்கள் எதிர்பார்ப்பு!

திருக்கோவிலுார்:நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதுகாக்க, பெண்ணையாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தின் பிரதான ஆறுகளில் ஒன்றான தென்பெண்ணையாற்றில் பல ஆண்டுகளாக செயல்பட்ட மணல் குவாரிகளால், கட்டாந்தரையாக ஆறு மாறியது. கடந்த நவம்பர் மாதம் வீசிய 'பெஞ்சல்' புயலால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், தென்பெண்ணையாற்றில் மணல் குவிந்து, நிலத்தடி நீரை மேம்படுத்தும் இயற்கையின் சமநிலைப்பாடு துவங்கி உள்ளது.இந்நிலையில், சமூக விரோதிகள் சிலர், ஆற்று மணலை சுரண்டும் பணியில் களமிறங்கி உள்ளனர். குறிப்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த முடியனுார் தென் பெண்ணை ஆற்றில், இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரம் வாயிலாக லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை; புகார் தெரிவிப்பவர்கள் மிரட்டப்படுகின்றனர்.மணல் கொள்ளை நடக்கும் பகுதியில் முடியனுார் மற்றும் எட்டு வழியோர குடியிருப்பு கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டம்; பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கு தண்ணீர் அனுப்பும் திட்டம் போன்றவை செயல்படும் இடத்தின் அருகிலேயே, பல மீட்டர் ஆழத்திற்கு பள்ளம் தோண்டி மணல் கடத்தப்படுகிறது.மணலுார்பேட்டை அடுத்த சித்தப்பட்டினம் ஏரியில் பட்டப்பகலில் பொக்லைன் இயந்திரம் வாயிலாக கிராவல் மண் தோண்டப்பட்டு, லாரிகளில் கடத்தப்படுகிறது. இதனால், பெண்ணையாறு மீண்டும் கட்டாந்தரையாகி, நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இதைத் தடுக்க, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !