உரிமைத் தொகை திட்டத்தில் 50 ஆயிரம் மகளிர்: வரும் தேர்தலில் ஓட்டுகளை அள்ள தி.மு.க., வியூகம்
க ள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக 50 ஆயிரம் பெண்களை சேர்த்து அவர்களின் குடும்பத்தின் ஆதரவை வரும் சட்டசபை தேர்தலில் பெற ஆளுங்கட்சி வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த 2023ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆண்டு வருவாய் 2.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி வார்டு உறுப்பினர் தவிர்த்து), ஓய்வூதியம் பெறுபவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. இத்திட்டத்தை செயல்படுத்தியவுடன் பல பெண்களுக்கு தகுதி இருந்தும் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்ற அதிருப்தி தொடர்ந்து வந்தது. இருப்பினும் கடந்த லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் மலையரசன் வெற்றி பெறுவதற்கு உரிமைத் தொகை பெற்ற பெண்களின் குடும்பத்தின் ஆதரவு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதையடுத்து மாவட்டத்தில் உரிமைத் தொகை திட்டத்திற்குள் குறைந்தது 50 ஆயிரம் பெண்களைக் கொண்டுவர ஆளுங்கட்சி இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. மாவட்டம் தோறும் நடைபெறும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் அளிக்கப்பட்ட 2ல் ஒரு பங்கு மனுக்கள் மகளிர் உரிமைத் தொகை தொடர்பானதாகவே இருந்தது. இம்முகாமில் இதுவரை 49 ஆயிரத்து 429 மனுக்கள் பெறப்பட்டதில் 30 ஆயிரத்து 139 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் கொடுத்த 61 சதவீத மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் இவர்களுக்கு விரைவில் உரிமைத்தொகை மாதம் தோறும் கிடைக்க ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து நடத்தப்படும் முகாம்களில் பெறப்படும் மனுக்களையும் பரிசீலித்து மொத்தம் 50 ஆயிரம் பேருக்கு உரிமைத் தொகை கிடைக்க ஆளுங்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் பெண்களின் ஆதரவைப் பெற்று அவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவரின் ஓட்டுகளையும் எளிதாக பெற்று விட முடிவு செய்துள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலைப் போலவே மகளிர் உரிமைத் தொகை திட்டம் சட்டசபை தேர்தலுக்கும் கை கொடுக்கும் என்ற கணக்கில் ஆளுங்கட்சியினர் வியூகம் வகுத்து செயல்பட்டு வருவது எதிர் கட்சிகளை கலக்கமடைய செய்துள்ளது.