உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுார் தொகுதியை தக்க வைத்து கொள்ள துடிக்கும் அ.தி.மு.க.,

திருக்கோவிலுார் தொகுதியை தக்க வைத்து கொள்ள துடிக்கும் அ.தி.மு.க.,

தி ருக்கோவிலுார் தொகுதி விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரிந்து கிடக்கிறது. 30 சதவீத நிலப்பகுதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், 70 சதவீத பகுதி விழுப்புரம் மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் 20 ஊராட்சிகளின் வளர்ச்சிப்பணி திட்டங்கள் மாவட்டத்தில் இருக்கும் மற்ற ஊராட்சிகளை ஒப்பிடும்போது மிக மிகக் குறைவு. விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சிகள் வளர்ச்சி திட்டப் பணிகள் ஒரளவுக்கு நிறைவு பெற்றுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 20 ஊராட்சியை சேர்ந்த மக்கள் ஆளும் அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். இத்தொகுதியில் மக்கள் மட்டுமல்ல கட்சி நிர்வாகிகளும் அதே மனநிலையில் உள்ளனர். எனவே திருக்கோவிலுார் தொகுதி எதிர்வரும் தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஒரு சவாலான தொகுதியாக உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சியான அ.தி.மு.க., வேகமாக காயை நகர்த்திக் கொண்டிருக்கிறது. கடந்த முறை அ.தி.மு.க., கூட்டணியில் இத்தொகுதி பா.ஜ., விற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், மக்க ளின் மனநிலை ஆளும் அரசுக்கு எதிராக இருப்பதால் அதனை சாதகமாக பயன்படுத்தி தாங்கள் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்ற நோக்கில் அ.தி.மு.க., நிர்வாகிகள் திருக் கோவிலுார் தொகுதியை விட்டுக் கொடுக்கக் கூடாது என கட்சி தலைமையிடம் கராராக தெரிவித்து வருவதாக முன்னணி நிர்வாகிகள் வெளிப் படையாக பேசி வருகின்றனர். தி.மு.க., வில் முன்னாள் அமைச்சரும் தொகுதி எம்.எல்.ஏ., வுமான பொன்முடி அல்லது அவரது வாரிசான மாவட்டச் செயலாளர் கவுதமசிகாமணிக்கு சீட்டு வாங்கிவிடுவர் என பேசப்படுகிறது. இது அக்கட்சியின் பழைய நிர்வாகிகளை சோர்வடையச் செய்துள்ளது. இது அ.தி.மு.க.வுக்கு பலத்தை அதிகரிக்க செய்துள்ளது. இந்நிலையில் 20 ஊராட்சியை தவிர்த்து திருக்கோவிலுார் உள்ளிட்ட மற்ற பகுதிகளில் மேற்கொள்ளப் பட்டிருக்கும் வளர்ச்சிப் பணி திட்டங்கள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என பொன்முடி தரப்பினர் நம்புவதால் தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்பதே தற்போதைய தேர்தல் கள நிலைமை என அரசியல் நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை