கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 22ம் தேதி வரை சிறப்பு முகாம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 2.98 லட்சம் கால்நடைகளுக்கு, சிறப்பு முகாம்கள் மூலம் வரும் 22ம் தேதி வரை கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் மாடு, எருமை வளர்த்து, பால் விற்பனை செய்தும், ஆடு, கோழி, பன்றி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து, சந்தைகளில் விற்பனை செய்தும் வருவாய் ஈட்டுகின்றனர்.இதில், மாடுகள் கோமாரி நோயால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. நோய் பாதித்த கால்நடைகளுக்கு காய்ச்சலும், வாய் மற்றும் கால் பகுதியில் கொப்பளங்களும் ஏற்படும். இதனால் கால்நடைகள் தீவனம் சாப்பிடாமல், நடக்க முடியாமலும் சிரமப்படும். காற்றின் மூலம் பரவும் நோய் என்பதால், கோமாரி பாதித்த கால்நடைக்கு அருகில் உள்ள விலங்குகளுக்கு எளிதில் நோய் பரவும். இதில், நோய் தாக்குதல் அதிகமாகும் கால்நடைகள் உயிரிழந்து விடும்.இதை தடுப்பதிற்காக, கால்நடை பராமரிப்பு துறை சார்பில், தேசிய கால்நடை நோய்கள் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் 2 முறை, கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோமாரி நோய் தாக்குதலில் கால்நடைகள் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பாண்டு ஜன., மாதம் கோமாரி தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று துவங்கியது.கனியாமூரில் நடந்த கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்து கூறியதாவது;கள்ளக்குறிச்சி கோட்டத்தில், 1,87,600, திருக்கோவிலுார் கோட்டத்தில் 1,10,400 என மொத்தமாக 2 லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகள் உள்ளன. கள்ளக்குறிச்சி கால்நடை பெருமருத்துவமனை, 2 கால்நடை மருத்துவமனைகள், 54 கால்நடை மருந்தகங்கள், 2 நடமாடும் மருந்தகங்கள், 6 ஆம்புலன்ஸ்கள் மூலமாகவும், வரும் 22ம் தேதி வரை கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தி பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.கள்ளக்குறிச்சி மாவட்ட இணை இயக்குநர் விஷ்ணு கந்தன் தலைமையில், துணை இயக்குநர் நாசர், உதவி இயக்குநர் சுதா கந்தசாமி, மருத்துவர் கந்தசாமி ஆகியோர் மேற்பார்வையில் டாக்டர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.