சங்கராபுரம் பஸ் நிலையத்தில் ஆட்டோ, பைக்குகள் நிறுத்தம்; டிரைவர்கள், பயணிகள் அவதி
சங்கராபுரம்; சங்கராபுரம் பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோ மற்றும் பைக்குகள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் பஸ் டிரைவர்கள் பஸ்சை எடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சங்கராபுரம் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தினசரி சங்கராபுரம் வந்து செல்கின்றனர். வெளியூரில் வேலை பார்க்கும் சிலர், தங்களின் பைக்கை பஸ் நிலையத்தில் தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர்.மேலும் ஆட்டோக்கள் பஸ் நிலையத்திற்குள் நுழைவதற்கு போலீசார் தடை விதித்தும், அதனை மதிக்காமல் பஸ் நிலையத்திற்குள் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் பஸ் டிரைவர்கள் பஸ்சை எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். பயணிகளும் அவதிக்குள்ளாகின்றனர்.மேலும், சங்கராபுரம் பஸ் நிலையத்தில் பள்ளி, கல்லுாரி மாணவிகளை கேலி செய்வதும், வெளியூரில் இருந்து வயதானவர்களை திசை திருப்பி அவர்களிடம் பிக்பாக்கெட் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கிறது.இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சங்கராபுரம் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.