பஸ் நிலைய கட்டுமான பணி: கள்ளக்குறிச்சியில் அமைச்சர் ஆய்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம், பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் வேலு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் 8 தளங்களுடன், ரூ. 139.41 கோடி மதிப்பில் 35.18 ஏக்கர் பரப்பளவில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணியை அமைச்சர் வேலு ஆய்வு செய்தார். அப்போது, முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி நகராட்சி, ஏமப்பேர் புறவழிச்சாலை ரவுண்டானா அருகில் 50க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தும் வகையில் ரூ.16.21 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புதிய புற நகர் பஸ் நிலையம் கட்டுமானப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் கலெக்டர் பிரசாந்த், எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மலையரசன் எம்.பி., டி.ஆர்.ஓ., ஜீவா, நகர்மன்ற சேர்மன் சுப்ராயலு, நகராட்சி ஆணையர் சரவணன் உடனிருந்தனர்.