மானிய தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
கள்ளக்குறிச்சி: உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்கும் பெண்கள் மானியத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேல் மதிப்பிலான உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியான இயந்திரங்கள் வாங்குவதற்கு மொத்த விலையில் ரூ. 5 ஆயிரம் மானியத் தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தை https://kallakurichi.nic.inஎன்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து உரிய சான்றுகளை இணைத்து, வரும் 31ம் தேதி மாலை 5:00 மணிக்குள், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.தமிழ்நாட்டில் பூர்விகமாக வசிக்கும் பெண் (பிறப்பிடச் சான்று), வயது 25 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். கைம்பெண், ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்று தாசில்தாரிடமிருந்து பெறப்பட வேண்டும். இயந்திரம் ஐ.எஸ்.ஐ., தரமுடையதாகவும், விலைப் பட்டியல் விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். கூடுதலாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகல் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.