முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம்; மருத்துவமனைகளுக்கு சான்றிதழ்
கள்ளக்குறிச்சி ; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவமனைகளுக்கு கலெக்டர் பிரசாந்த் நற்சான்றிதழ்களை வழங்கினார்.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்துடன் இணைந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் 6வது ஆண்டு விழா நடத்தப்பட்டது. அதில் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிறப்பாக பணிபுரிந்து வரும் மருத்துவமனைகள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள், மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிகிச்சைப் பெற்ற பயனாளிகளுக்கு பரிசுகளையும் கலெக்டர் பிரசாந்த் வழங்கினார்.தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய மருத்துவமனைகள் மற்றும் வார்டு மேலாளர்களுக்கு கேடயம் மற்றும் நற்சான்றிதழ்கள் கலெக்டர் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் பவானி, நலப்பணிகள் துறை இணை இயக்குநர் செந்தில்குமார், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அன்புமணி, கணேஷ்ராஜா, மருத்துவக் காப்பீட்டு திட்ட மாவட்ட திட்ட அலுவலர் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.