உயர்கல்வி சேர்க்கை பெற மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை அணுகலாம் கலெக்டர் தகவல்
கள்ளக்குறிச்சி: பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வி பயில உயர்கல்வி வழிகாட்டி திட்ட கட்டுபாட்டு மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024 - 25ம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்து முடித்த அனைத்து மாணவர்களும் உயர்கல்வி படித்து வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கலெக்டர் அலுவலகத்தில் உயர்கல்வி வழிகாட்டி திட்ட கட்டுபாட்டு மையம் துவங்கப்பட்டுள்ளது. கட்டுபாட்டு அறை உறுப்பினர்கள் மூலம் உயர்கல்வியில் சேராமல் இருக்கும் மாணவ, மாணவிகளை தொடர்பு கொண்டு வருவாய் துறை அலுவலர்கள் நேரடியாக சென்று, கலெக்டர் அலுவலக கட்டுபாட்டு அறைக்கு வரவழைத்து தேவையான ஆலோசனைகள் வழங்கி உயர்கல்வியில் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 13,374 மாணவர்களில் 12,080 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெற்றுள்ளனர். இதில் உயர்கல்வி வழிகாட்டி திட்ட கட்டுபாட்டு அறை அலுவலர்கள் தொலைபேசியில் மாணவர்களை தொடர்பு கொண்டு அழைத்து உரிய ஆலோசனை வழங்கி 3,500 மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்துள்ளனர். மேலும் பள்ளி சேர்க்கையின் போது வழங்கப்பட்ட முகவரி மற்றும் மொபைல் எண் முழுமையாக இல்லாததால், மாணவர்கள் சிலரை மாவட்ட கட்டுபாட்டு அறை மூலம் தொடர்பு கொள்ள இயலாத நிலை உள்ளது. எனவே, மாணவர்கள் 8122309830 மற்றும் 04151 - 228802 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்து செய்து பயன்பெறலாம். உயர்கல்வியில் சேர்க்கை பெற்றிருந்தால், அதன் விவரத்தினை மாவட்ட கட்டுபாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் உள்ளது.